கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு
x
தினத்தந்தி 13 Oct 2023 11:00 PM GMT (Updated: 13 Oct 2023 11:01 PM GMT)

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

மைசூரு,

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொய்த்துவிட்டது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணை மட்டும் நிரம்பியது. மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை, ஹாசனில் உள்ள ஹேமாவதி அணை, குடகில் உள்ள ஹாரங்கி அணை ஆகியவை நிரம்பவில்லை. இருப்பினும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்பேரில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நேற்றும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 3,701 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. 124.80 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 101.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5,884 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இதுபோல் கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2,276.02 அடியாக (கடல் மட்டத்தில் இருந்து) இருந்தது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 2,284 அடி ஆகும். நேற்று காலையில் இந்த அணைக்கு வினாடிக்கு 1,864 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 4,501 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 4,698 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. அது நேற்று வினாடிக்கு 4,501 கன அடியாக குறைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story