உக்ரைன் போர் பற்றிய ஜி-20 மாநாட்டு தீர்மானம் பைடனின் முயற்சிக்கு ஒரு பெரிய முன்னெடுப்பாக இருக்கும்: வெள்ளை மாளிகை


உக்ரைன் போர் பற்றிய ஜி-20 மாநாட்டு தீர்மானம் பைடனின் முயற்சிக்கு ஒரு பெரிய முன்னெடுப்பாக இருக்கும்:  வெள்ளை மாளிகை
x
தினத்தந்தி 10 Sep 2023 10:46 AM GMT (Updated: 10 Sep 2023 4:34 PM GMT)

உக்ரைன் போர் பற்றிய ஜி-20 மாநாட்டு தீர்மானம் பைடனின் முயற்சிக்கு ஒரு பெரிய முன்னெடுப்பாக இருக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

வாஷிங்டன்,

டெல்லியில் பாரத் மண்டபத்தில் நேற்றும், இன்றும் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநாட்டுக்கு அழைப்பு விடப்பட்ட மற்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பல்வேறு விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. சர்வதேச விவகாரங்களில் தீர்வு காண்பதற்கான வழிகளை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர்.

ஜி-20 உச்சி மாநாட்டில் உக்ரைன் மற்றும் ரஷியா போர் தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. சபை எடுத்த நிலைப்பாட்டை வலியுறுத்தி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உக்ரைனில் அமைதி நீடித்தால் ஐ.நா. சபையில் அனைத்து நோக்கங்கள், கொள்கைகள் நிலைநிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையை சேர்ந்த முதன்மை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜோன் பைனர் இன்று கூறும்போது, கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த உச்சி மாநாட்டின்போது, ஜி-20 நாடுகள் பாலியில், அறிவிப்பு ஒன்றில் கையெழுத்திட்டன.

அதில், ரஷியாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிரான ஐ.நா.வின் பல்வேறு தீர்மானங்களுக்கு பெருமளவிலான உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.

இதேபோன்று, ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதில் படைகளை பயன்படுத்துவதில் இருந்து ரஷியா விலகி இருக்க வேண்டும் என்ற ஐ.நா.வின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப டெல்லியில் நேற்று வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை தெரிவித்து உள்ளது.

இதனால், உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டு வரும் படையெடுப்பு குறித்த ஜி-20 மாநாட்டு தீர்மானம், பைடனின் முயற்சிக்கு ஒரு பெரிய முன்னெடுப்பாக இருக்கும் என தெரிவித்து உள்ளார்.


Next Story