டெல்லியில் கொள்ளை கும்பல் அட்டூழியம்: திறந்து இருந்த காருக்குள் வாலிபர் குத்தி கொலை; சிறுவன் கைது


டெல்லியில் கொள்ளை கும்பல் அட்டூழியம்:  திறந்து இருந்த காருக்குள் வாலிபர் குத்தி கொலை; சிறுவன் கைது
x

டெல்லியில் திறந்து இருந்த காருக்குள் புகுந்து வாலிபரை சிறுவன் உள்ளிட்ட கொள்ளை கும்பல் குத்தி கொலை செய்து உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியின் ஜப்ராபாத் நகரில் யமுனா விகார் சாலையில் கார் ஒன்று நேற்று அதிகாலை 5.31 மணியளவில் தனியாக நின்று உள்ளது. அதன் கதவு திறந்து இருந்த நிலையில், உள்ளே வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் கிடந்து உள்ளார்.

இதுபற்றி போலீசாருக்கு தொலைபேசி வழி தகவல் சென்று உள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி வடகிழக்கு துணை காவல் ஆணையாளர் ஜாய் திர்க்கி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தில், கத்தி குத்துகளுடன் கிடந்த அர்ஜூன் (வயது 32) என்பவரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறி விட்டனர். அவரது கழுத்தில் கத்தியால் குத்தி உள்ளனர். இதில், அவர் உயிரிழந்து உள்ளார்.

இதுபற்றிய சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், அர்ஜூன் கார் கதவை திறந்து வைத்து இருந்துள்ளார். அப்போது, அந்த வழியே சென்ற 4 பேர், திறந்திருந்த காரை பார்த்ததும், அர்ஜூனிடம் கொள்ளையடிக்க முயன்று உள்ளனர்.

இதில், இரண்டு தரப்புக்கும் மோதல் நடந்து உள்ளது. இந்த சம்பவத்தில், வாலிபருக்கு கத்தி குத்து விழுந்து உள்ளது. அதன்பின்னர், 4 பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியுள்ளனர். உயிரிழந்த அர்ஜூன் உத்தர பிரதேச மாநில பகுதியை சேர்ந்தவர்.

அந்த கார் அரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு உரியது. தப்பியோடிய 4 பேரில் 16 வயது சிறுவன் ஒருவனும் உள்ளான். சிறுவனை போலீசார் கைது செய்து உள்ளனர். மற்ற 3 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

எனினும், அவர்களை கைது செய்யும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் கூறியுள்ளனர்.


Next Story