மணிப்பூரில் பாதுகாப்பு முகாமை சூறையாட முயன்ற கும்பல்; முறியடித்த இந்திய ராணுவம்
மணிப்பூரில் பாதுகாப்பு முகாமை தாக்கி கொள்ளையடிக்க நடந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து உள்ளது.
இம்பால்,
மணிப்பூரில் மெய்தி சமூகத்திற்கும் மற்றும் பழங்குடி பிரிவினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. இந்த மோதலில் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பலர் காயமடைந்தும் உள்ளனர். இந்த கலவரம் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது.
தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில், மக்கள் அச்சம் மற்றும் பதற்றத்துடனேயே உள்ளனர். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் என அன்றாட பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் கூட ஆயுதங்களை ஏந்தியுள்ள சூழல் காணப்படுகிறது.
மணிப்பூரில் பல பகுதிகளில் பதுங்கு குழியை அமைத்து, அவற்றை பாதுகாப்பதற்காக கிராமவாசிகளால் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் இதுபோன்று பணியில் இருந்த 3 தன்னார்வலர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் இந்திய ரிசர்வ் படையினர் தங்கியுள்ள நிலைகளை நோக்கி நூற்றுக்கணக்கானோர் அடங்கிய கும்பல் ஒன்று சென்று உள்ளது.
அவர்கள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் சென்றனர். அவர்களை படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் கும்பலை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். சிலர் காயமடைந்து உள்ளனர்.
இந்த நிலையில், இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அந்த கும்பல் படை வீரர்களின் செயல்பாடுகளை தடுப்பதற்காக சாலைகளை மறித்து இருந்தது. எனினும், அசாம் ரைபிள் படை மற்றும் அதிரடி விரைவு படையினர் உடனடியாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.