வீடுகளுக்கே சென்று உணவு வினியோகிப்பது போல கஞ்சா விற்பனை
வீடுகளுக்கே சென்று உணவு வினியோகம் செய்வது போல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒயிட்பீல்டு:
வீடுகளுக்கே சென்று உணவு வினியோகம் செய்வது போல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கஞ்சா விற்பனை
பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் சிலர் ஆன்லைன் உணவு வினியோக பிரதிநிதிகள் போல் இருந்து கொண்டு வீடுகளுக்கே சென்று கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுபற்றி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார்கள் குவிந்தன.
அதன்பேரில் போலீசார் சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 2 பேரை தனித்தனியே பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் அந்த பகுதியில் வீடுகளுக்கே சென்று உணவு வினியோகம் செய்வதுபோல், கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் அந்த ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனங்களின் டீ-சர்ட், பை ஆகியவற்றையும் வைத்திருந்தனர்.
கைது
இதில் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவு வினியோக வேலையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் டீ-சர்ட், பையை ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 3 கிலோ கஞ்சா, போதை பொருட்கள், செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது ஒயிட்பீல்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.