இவர்தான் கீர்த்தி சுரேஷாம்...! பேஸ்புக்கில் காதல் வலை வீசிய பெண்...! இளைஞரிடம் ரூ.40 லட்சம் அபேஸ்

சினிமா பிரபலங்களின் புகைப்படங்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் நடந்துள்ளது.
பெங்களூரு
கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் பேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கி அதில் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை கொஞ்சம் எடிட் செய்து டிபியாக வைத்துள்ளார்.
பின்னர் அந்த கணக்கில் இருந்து ஆண்களுக்கு நட்பு அழைப்பு (பிரெண்ட் ரெக்வஸ்ட்) கொடுத்துள்ளார். அப்படி அவர் அனுப்பிய அழைப்பை அம்மாநிலத்தின் விஜயாபூர் மாவட்டத்தை சேர்ந்த பரசுராமா என்பவர் ஏற்று அவருடன் பழக ஆரம்பித்துள்ளார். அவரிடம் தான் கல்லூரியில் படிப்பதாக கூறி வந்துள்ளார் மஞ்சுளா. பின்னர் அவரிடம் வாட்ஸ் அப் நம்பர் வாங்கி பேசி வந்துள்ளார் மஞ்சுளா.
அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதை அடுத்து, தனது கல்லூரி படிப்பு செலவுக்கு பண உதவி கேட்டு பரசுராமாவிடம் இருந்து பணத்தை கறக்க தொடங்கியுள்ளார் மஞ்சுளா. இடையே காதலிப்பதாகவும் மஞ்சுளா ஆசை வார்த்தை கூறியதை கேட்டு காதல் வலையில் சிக்கிய பரசுராமா அவர் கேட்கும்போதெல்லாம் பணம் அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் ஒருநாள் பரசுராமாவிடம் நைசாக பேசி அவர் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை கேட்டு அதனை வாங்கியுள்ளார் மஞ்சுளா. பின்னர் அந்த வீடியோவை வைத்தே பரசுராமாவை பிளாக்மெயில் செய்யத்தொடங்கிய மஞ்சுளா அவரிடம் இருந்து தொடர்ந்து பணம் வாங்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மஞ்சுளாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் போலீசில் புகார் கொடுத்துள்ளார் பரசுராமா.
பின்னர் விசாரணையில் இறங்கிய சைபர் கிரைம் போலீசார் மஞ்சுளாவை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் கல்லூரி பெண் இல்லை என்றும் அவருக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் மஞ்சுளாவின் கணவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள மஞ்சுளாவின் கணவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
பரசுராமாவிடம் இருந்து அபேஸ் பண்ணிய ரூ.40 லட்சத்தை வைத்து கார், பைக், 100 கிராம் தங்கம் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ள மஞ்சுளா, வீடு கட்டும் பணிகளையும் மேற்கொண்டு வந்தது விசாரணையில் அம்பலமானது. மஞ்சுளா இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி உள்ளாரா என்கிற கோணத்திலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம்.