மேற்கு வங்கத்தில் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம் - காவல் நிலையத்திற்கு தீ வைப்பு


மேற்கு வங்கத்தில் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம் - காவல் நிலையத்திற்கு தீ வைப்பு
x

காவல் நிலையத்திற்கு தீ வைத்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கொல்கத்தா,


மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் பகுதியில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சிறுமி கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலீசார் அந்த சிறுமியின் உடலை தெருவில் தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


காவல்துறையினர் தொடக்கம் முதலே இந்த சம்பவத்தில் மெத்தன போக்குடன் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தொடர்ந்து சிறுமியின் கொலைக்கு நியாயம் கேட்டு போராட்டங்கள் நடந்து வருகின்றன.


இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமியின் உடலில் காயங்களோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சான்றுகளோ இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல்கள் காரணமாக போராட்டம் வன்முறையாக மாறியது. அங்குள்ள கடைகள் சூறையாடப்பட்டதோடு, சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கலியாகஞ்ச் காவல் நிலையத்திற்குச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், காவல் நிலையத்திற்கும், அங்கிருந்த வாகனங்களுக்கும் தீவைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



Next Story