தவிக்க வைக்கும் தங்கம்


தவிக்க வைக்கும் தங்கம்
x

தங்கம் விலை தவிக்க வைப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பெங்களூரு:

அனைவரின் வாழ்க்கையிலும் சரி, அரசாங்கங்களின் இயக்கங்களிலும் சரி, தங்கம் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது. ஏழை எளியவர் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் தங்கத்தின் மீது தாளாத மோகம் கொண்டு இருக்கிறார்கள். ஒரு குண்டுமணி தங்கம்கூட இல்லாமல் தமிழர்களின் இல்லங்களில் சுப துக்ககாரியங்கள் நடப்பது இல்லை. அதே நேரத்தில் சாமானியர்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என எல்லோராலும் தங்கம் ஒரு லாபகரமான, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.

பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற இதரச் சொத்துகள் வீழ்ச்சி அடையக்கூடும். ஆனால் தங்கம் எப்போதும் முன்னணியிலேயே நிற்கும். நிதி நெருக்கடியா? தங்கத்தை அடகுவைத்து அல்லது விற்று உடனடியாக பணமாக்கிகொள்ள முடியும்.

விலை நிர்ணயம்

இந்தியாவுக்கு துபாய், லண்டன் போன்ற இடங்களில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. நமது நாட்டில் மும்பைதான் தங்க 'நெட்வொர்க்' மையமாக செயல்பட்டு வருகிறது. அங்கிருந்தே இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான தங்கம் 'சப்ளை' செய்யப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வது, 'லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேசன்'தான். ஒவ்வொரு நாளும் (விடுமுறை நாட்களை தவிர) காலை 10.30 மணிக்கும், மதியம் 3 மணிக்கும் அமெரிக்க டாலர்களில் இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை மையமாக வைத்தும், இன்சூரன்ஸ், இறக்குமதி வரி, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றையும் சேர்த்தும் அனைத்து நாடுகளிலும் விலை நிர்ணயம் ஆகிறது.

இந்தியாவில் மும்பையில்தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உலகச்சந்தையில் எப்படி காலை, மாலையில் விலை நிர்ணயிக்கப்படுகிறதோ, அதேபோல் இங்கும் விலை தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறாக விலை நிர்ணயம் செய்யப்படும் தங்கத்தின் விலை ஆண்டுக்காண்டு மேல்நோக்கியே பயணிக்கிறது.

ஏறுமுகத்தில் தங்கம் விலை

1920-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.21-க்கு விற்பனை ஆன நிலையில், 2001-ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 368 ஆகவும், 2011-ம் ஆண்டில் ரூ.22 ஆயிரத்து 104 ஆகவும் உயர்ந்துகொண்டே வந்தது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 416-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இல்லாத விலை உயர்வாக இது இன்றளவும் பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் விலை சற்று குறையத் தொடங்கி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 880-க்கு விற்கப்பட்டது.

இப்படியாக தொடர்ந்து தங்கம் விலை ரூ.36 ஆயிரத்திற்கும் ரூ.40 ஆயிரத்திற்கும் இடையில் இருந்துவந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷியா-உக்ரைன் இடையே போர் தொடங்கிய நேரத்தில், முதலீட்டாளர்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டினர். இதனால் அதன் விலையும் சற்று சரிந்து காணப்பட்டது. அதையடுத்து மீண்டும் தங்கத்தின் விலை பெருமளவில் ஏறுமுகத்திலேயே இருந்தது.

ஒரு பவுன் ரூ.40 ஆயிரம்

கடந்த மார்ச் மாதம் 7, 8, 9-ந் தேதிகளிலும், ஏப்ரல் மாதம் 14, 15, 16, 17, 18, 19-ந் தேதிகளிலும் ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. அதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டுவந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்துவருவதை பார்க்க முடிகிறது.

கடந்த 2-ந் தேதியன்று மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் தங்கம் விலை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

பயமாக உள்ளது

பெங்களூரு கே.பி.அக்ரஹாராவை சேர்ந்த இல்லத்தரசி ஜெமிமா என்பவர் கூறுகையில், "தங்கத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக தென் தமிழகத்தை சேர்ந்த பெண்களுக்கு தங்கம் என்றால் அலாதி பிரியம். ஆனால் தங்கம் விலையை நினைத்தால் தான் அதனை வாங்கவே மிகவும் பயமாக உள்ளது. முன்காலங்களில் தங்கம் விலை குறைவாக இருந்தது. இதனால் பெண்களுக்கு அதிக தங்கம் கொடுத்து திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் முன்பு கொடுத்தது போல நகைகள் கொடுக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. கொரேனாவுக்கு பிறகு தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் பயன்படுத்துவதற்கு மட்டுமின்றி அத்தியாவசிய தேவைகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. எனவே தங்கம் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அடகு வைப்பவர்களுக்கு வரப்பிரசாதம்

பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள தனியார் நிதி நிறுவன அதிகாரி சுனிதா கூறுகையில், "தற்போதைய காலகட்டத்தில் தங்க நகைகளை அடகு வைக்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது. தங்க நகைகளின் அன்றைய விலைக்கு ஏற்ப தான் நாங்கள் கடன் கொடுத்து வருகிறோம். தற்போது தங்கம் விலை உயர்ந்துள்ளதால், அடகு வைப்பவர்களுக்கும் கூடுதல் பணம் கிடைக்கும். ஆனால் வட்டி முறையில் எந்த மாற்றமும் இருக்காது. தங்கம் விலை உயர்வு, அடகு வைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாகும். தங்கம் விலை உயர்ந்துள்ளதால் அடகு வைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். நகைக்கடைகளில் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும். என்ைன ெபாறுத்தவரை தங்கம் விலை உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது. இதனை ஏற்க முடியாது. இதனால் பாமர மக்கள் தான் மிகவும் பாதிக்கப்படுவார்கள்" என்றார்.

மங்களூரு கோடிக்கல் பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவர் கூறுகையில், "தங்கம் விலை அடிக்கடி உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு பவுனுக்கு ரூ.520 என்ற அளவில் விலை ஏறுகிறது. ஆனால் விலை குறையும் போது ரூ.100, ரூ.200 என்ற அளவில் தான் குறைகிறது. தங்கம் விலை உயர்ந்து வருவதை பார்த்தால், இனி நகைக்கடைகள் பக்கம் போக முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கொரோனாவால் மக்களின் வாழ்க்கையில் ஏகப்பட்ட மாற்றம் நிகழ்ந்துவிட்டது. ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் தங்கம் வாங்க கூடிய சூழ்நிலை தற்போது இல்லை.அனைத்து தொழில்களும் மந்தமாக உள்ளது ஆனால் தங்கம் விலை மட்டும் ஏறிக்கொண்டு போகிறது அதனால் தங்கத்தின் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்.

கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்

சிவமொக்கா வினோபா நகரில் வசித்து வரும் பல் டாக்டர் தமிழரசி கூறுகையில், "குறிப்பாக தென்னிந்தியாவில் வசிக்கும் பெண்கள் மத்தியில் தான் தங்கத்தின் மீது பெரிய மதிப்பு உள்ளது. நகைகள் ஒரு குடும்பத்தின் கவுரவமாக பார்க்கப்படுகிறது. பிள்ளைகளின் படிப்பு அல்லது திருமணங்கள் மற்றும் திடீர் அத்தியாவசிய தேவைக்காக தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெறும் நிலை உள்ளது. இதனால் தங்க நகைகள் சேமிப்பு என்பது அனைத்து குடும்பத்திலும் அவசியமானதாக மாறிவிட்டது. ஆனால் தங்கத்தின் விலை ஏறி வருவது மக்களை பெரிதும் பாதிக்கிறது. தங்கத்தின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது தான் உண்மை. பிற நாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து சிக்கிக் கொள்வதும் அதிகளவில் நடக்கிறது. தங்கவிலை உயர்வை அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே என்னைப் போன்ற பெண்களின் மனநிலை" என்றார்.

மங்களூரு குந்திகானா பகுதியை சேர்ந்த ஓட்டல் அதிபர் விஜயகுமார் கூறுகையில், "இந்தியாவில் தான் தங்கம் அதிகளவில் விற்பனை ஆகிறது. குறிப்பாக தென் இந்தியாவில் தான் தங்கத்தில் மக்கள் முதலீடு செய்து வருகிறார்கள். அவசர தேவைக்கு தங்கத்தை அடகு வைத்து பணம் வாங்கிக்கொள்ளலாம். இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க யோசிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். வரும் நாட்களில் தங்கத்தின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டால் ஏழை, எளிய மக்களும் நகை வாங்கும் ஆசையை நிறைவேற்றுவர். எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு தங்கத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தட்சிணகன்னடா மாவட்டம் முல்கி அருகே பிஜாப்பூர் காலனியை சேர்ந்த சீதாம்மா கூறுகையில், "எனக்கு 5 பெண்கள் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. கடைசி மகளுக்கு 2 வயது தான் ஆகிறது. மற்ற 4 பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும். நாங்கள் கட்டிட கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது தங்கம் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. தங்கம் விலையை கேட்டாலே எனது பிள்ளைகளுக்கு ஒரு கிராம் கூட என்னால் வாங்க முடியாத நிலமையில் உள்ளேன். என்னை போன்ற தொழிலாளர்களுக்கு தங்கம் எட்டாத கனியாக மாறி வருகிறது" என்றார்.

தங்க சுரங்கத்தை திறக்க வேண்டும்

கோலார் தங்கயவலை சேர்ந்த குடும்பத்தலைவி லட்சுமி ராஜேந்திரன் கூறுகையில், "10 ஆண்டுகளுக்கு முன் எனது கணவர் ஒரு சவரன் (8 கிராம்) ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கிக்கொடுத்தார். ஆனால், இன்று ஒரு கிராம் தங்கநகை ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. இதனால் தங்கம் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி உள்ளது. ஏழைகள் இனி தங்கநகைகள் அணிவதையே மறந்து விடவேண்டும். கோலார் தங்கச்சுரங்கத்தில் உலகத்திற்கே வினியோகம் செய்யும் அளவுக்கு தங்கம் உள்ளது. மற்ற நாடுகளில் இருந்து இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்வதை காட்டிலும், கோலார் தங்கச்சுரங்கத்தில் உள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் தங்கத்தை வெட்டியெடுத்தால் இந்தியா மிகவும் வல்லரசு நாடாக மாறிவிடும். எனவே தங்க சுரங்கத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கோலார் தங்கவயல் தங்கநகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சுதர்சன்ஜெயின் கூறுகையில், தங்கநகைகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதை வாங்கும் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிலத்தை வாங்கி வைக்கிறோம். ஆனால் அதை வாங்குபவரின் விலைக்குத் தான் அதை கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதிலும் நிலத்தை விற்பனை செய்ய பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதை விற்று பணத்தை பெறுவதற்குள் போதும் போதும் என்று நிலை ஏற்படுகிறது. ஆனால் தங்கத்தில் நிலை அப்படியில்லை. எப்போது வேண்டும் என்றாலும் தேவைப்பட்ட போது அதை விற்று பணத்தை வாங்கி தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம். எனவே, தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதை பொதுமக்கள் வாங்கி வைத்து வருகிறார்கள். வியாபாரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.

வாடிக்கையாளர்கள் வருகை குறைகிறது

கோலார் தங்கவயலை சேர்ந்த ஒரு நகைக்கடை உரிமையாளர் சி.அசோக் கூறுகையில், "தங்கம் விலை உயர்வால் எங்கள் கடைக்கு நகைகளை வாங்க வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடைப்பக்கமே வருவதில்லை. நாள் தோறும் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் தான் மக்கள் வருகிறார்கள். சர்வதேச அளவில் உலகப்போரை காரணம் கூறி தங்கத்தின் விலையை உயர்த்துகிறார்கள். போர் மூளும் என்ற அச்சத்தில் உலக நாடுகள் குவித்து வைப்பதால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயருகிறது. இந்த நிலை மாறினாலே தங்கம் விலை மட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலையும் குறையும்" என்றார்.

சிக்கமகளூரு மாவட்டம் கடூரில் உள்ள பிரபல நகைக்கடையில் பணியாற்றும் ஊழியரான சிவக்குமார் கூறுகையில், "தங்கம் விலை கடந்த 10 நாட்களில் பவுனுக்கு ரூ.1,000-ம் அதிகரித்துள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் என்பதால் வாடிக்கையாளர்கள் வரத்து அதிகமாகவே உள்ளது. விலை உயர்ந்து கொண்டே சென்றாலும், மக்களும் வேறு வழியில்லாமல் தங்க நகைகளை வாங்கி செல்கிறார்கள். தங்கம் விலை குறையும்பட்சத்தில், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் உயரும். உக்ரைன் போர், இந்திய ரூபாயின் வீழ்ச்சியால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


Next Story