சீனாவை உலுக்கி வரும் மர்ம காய்ச்சல் பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் - மத்திய சுகாதார மந்திரி


சீனாவை உலுக்கி வரும் மர்ம காய்ச்சல் பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் - மத்திய சுகாதார மந்திரி
x
தினத்தந்தி 25 Nov 2023 9:30 PM GMT (Updated: 25 Nov 2023 9:30 PM GMT)

சீனாவில் பரவி வரும் வைரஸ் தொற்று, ஒரு மனிதரிடமிருந்து, மற்றொரு மனிதருக்கு பரவும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும், குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேசனா,

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தற்போது புதிய வகை மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. நாடு முழுவதும் பரவி வரும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் இன்புளூவன்சா காய்ச்சலால் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பே இன்னும் முழுமையாக மறையாத நிலையில், மீண்டும் இன்புளூவன்சா காய்ச்சல் தாக்குதலால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவது சீனாவை பீதிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதேநேரம் இந்த காய்ச்சல் பரவல் உலக நாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. எனவே இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் சீனாவை தொடர்பு கொண்டு பேசி வருகிறது.

சீனாவில் பரவி வரும் வைரஸ் தொற்று, ஒரு மனிதரிடமிருந்து, மற்றொரு மனிதருக்கு பரவும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும், குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவை உலுக்கி வரும் இந்த மர்ம காய்ச்சல் இந்தியாவுக்குள் நுழைந்து விடுமோ என்ற அச்சம் நாடு முழுவதும் ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அச்சம் வெளியிட்டு உள்ளனர். ஆனால் எந்தவொரு சுகாதார அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தது.

நாட்டில் அசாதாரண நோய்க்கிருமி அல்லது எதிர்பாராத மருத்துவ வெளிப்பாடுகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என கூறியிருந்த அமைச்சகம், குழந்தைகளின் சுவாச நோய்க்கான வழக்கமான காரணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த காய்ச்சல் பரவலால் சீனாவில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

குஜராத்தின் மேசனாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இந்த சூழலை நாங்கள் கண்காணித்து வருகிறோம். சீனாவில் அதிகரித்து வரும் நிமோனியா பாதிப்புகளை இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) மற்றும் சுகாதாரப்பணிகள் இயக்குனர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்தியாவில் இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என தெரிவித்தார்.


Next Story