நாங்கள் பழிவாங்கும் அரசியல் செய்யவில்லை - சித்தராமையா
கொரோனா முறைகேடு குறித்த முதல் அறிக்கை அரசுக்கு வந்துள்ளது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த விசாரணைகளை ஒருங்கிணைக்க மந்திரி பரமேஸ்வர் தலைமையில் மந்திரிசபை துணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. மந்திரிகள் கிருஷ்ண பைரேகவுடா, சந்தோஷ் லாட், எச்.கே.பட்டீல் ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு தனது அறிக்கையை வழங்க 2 மாதங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
பிட்காயின், 40 சதவீத கமிஷன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமன முறைகேடு, கொரோனா முறைகேடு ஆகியவை பற்றி விசாரிக்க விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா முறைகேடு குறித்த முதல் அறிக்கை அரசுக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் பழிவாங்கும் அரசியல் செய்யவில்லை. பா.ஜனதாதான் எனக்கு எதிராக பழிவாங்கும் அரசியலை செய்கிறது. எங்கள் அரசு எப்போதும் பழிவாங்கும் அரசியலை செய்யாது. ஆனால் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.