தேசிய சுகாதார திட்ட ஊழியர்களுக்கு கர்நாடக அரசு 'கெடு'


தேசிய சுகாதார திட்ட ஊழியர்களுக்கு கர்நாடக அரசு கெடு
x

சம்பள உயர்வு வழங்க கோரி கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்தம் நடத்தி வரும் நிலையில் 48 மணி நேரத்திற்குள் பணிக்கு ஆஜராகாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுகாதார திட்ட ஊழியர்களுக்கு கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூரு:

சம்பள உயர்வு வழங்க கோரி கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்தம் நடத்தி வரும் நிலையில் 48 மணி நேரத்திற்குள் பணிக்கு ஆஜராகாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுகாதார திட்ட ஊழியர்களுக்கு கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பணி நிரந்தரம்

கர்நாடக சுகாதாரத்துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் 30 ஆயிரத்து 574 பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் இதுவரை அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற முன்வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள், தங்களது கோரிக்கையை நிறைவேற்றாத கர்நாடக அரசை கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் கடந்த ஒரு மாதமாக பெங்களூரு சுதந்திர பூங்காவில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தொடர் போராட்டம்

இந்த போராட்டத்தை அடுத்து மாநில அரசு அவர்களுக்கு 15 சதவீத சம்பள உயர்வு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்து அதை செயல்படுத்தியுள்ளது. மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக சுகாதாரத்துறை உறுதியளித்துள்ளது. இருப்பினும் அந்த சுகாதார ஊழியர்கள் தங்களின் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் சுகாதார சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

சட்ட நடவடிக்கை

இந்த நிலையில் சுகாதாரத்துறை இயக்குனர், அவர்களுக்கு தனித்தனியாக நோட்டீசு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "சுகாதாரத்துறை அவசர சேவைகளை வழங்கும் துறை ஆகும். நீங்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தத்தால் நோயாளிகளுக்கு பெரும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த நோட்டீசு கிடைக்க பெற்ற 48 மணி நேரத்திற்குள் பணிக்கு ஆஜராக வேண்டும் இல்லாவிட்டால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story