மொழி, நாடு பேதம் பார்க்காமல் மக்களை யோகா ஒன்றிணைக்கிறது; கவர்னர் கெலாட் பேச்சு


மொழி, நாடு பேதம் பார்க்காமல் மக்களை யோகா ஒன்றிணைக்கிறது; கவர்னர் கெலாட் பேச்சு
x
தினத்தந்தி 21 Jun 2023 9:04 PM GMT (Updated: 22 Jun 2023 9:33 AM GMT)

ஆரோக்கியமாக வாழ வழிவகுப்பதுடன், நாடு, மொழி என்ற பேதம் பார்க்காமல் யோகா மக்களை ஒன்றிணைப்பதாக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கூறியுள்ளார்.

பெங்களூரு:

ஆரோக்கியமாக வாழ வழிவகுப்பதுடன், நாடு, மொழி என்ற பேதம் பார்க்காமல் யோகா மக்களை ஒன்றிணைப்பதாக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கூறியுள்ளார்.

பெங்களூரு விதானசவுதாவில் நடைபெற்ற 9-வது உலக யோகா தினத்தை தொடங்கி வைத்து கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:-

மக்களை ஒன்றிணைக்கிறது

நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு யோகா அவசியமான ஒன்றாகும். நாடு, மொழி என்ற எந்த ஒரு பேதம் பார்க்காமல் மக்களை இந்த யோகா ஒன்றிணைக்கிறது. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் யோகாவின் பங்கு மிகப் பெரியதாகும். தினமும் யோகா செய்வதன் மூலமாக மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக வாழ முடியும்.

நமது நாட்டின் பெருமையை இந்த உலகுக்கே யோகா பறைசாற்றி வருகிறது. யோகாவால் கிடைக்கும் நன்மைககள், ஆரோக்கியம் பற்றி உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் 9-வது உலக யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் யோகா தினம் அனுசரிக்க அழைப்பு விடுத்திருந்தார்.

நமக்கு கிடைத்த பெருமை

அதன்படி, தற்போது 172 நாடுகளில் ஜூன் மாதம் 21-ந் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் பல நாடுகளில் வசிக்கும் மக்கள் தினமும் ஆர்வமுடன் யோகா செய்து வருகிறார்கள். யோகா செய்வதன் மூலமாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகுத்து கொடுக்கிறது.

கர்நாடகத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் யோகாவை கொண்டு செல்வதன் மூலமாக, நாட்டிலேயே கர்நாடகத்தை யோகா மாநிலமாக மாற்ற முயற்சிக்க வேண்டும். யோகா நமது நாட்டில் தான் பிறந்தது என்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் யு.டி.காதர், மந்திரி தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.


Next Story