ஒடிசாவில் சிவன் கோவில்களில் கஞ்சா பயன்பாட்டுக்கு அரசு தடை; புதிய சர்ச்சை


ஒடிசாவில் சிவன் கோவில்களில் கஞ்சா பயன்பாட்டுக்கு அரசு தடை; புதிய சர்ச்சை
x

கோப்பு படம்

ஒடிசாவில் சிவன் கோவில்களில் கஞ்சா பயன்பாட்டுக்கு தடையால் புதிய சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

புவனேஸ்வர்,

ஒடிசாவின் அனைத்து 30 மாவட்டங்களில் உள்ள கலெக்டர்களுக்கும் அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன்படி, மாநிலத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் கஞ்சா பயன்பாட்டை தடை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், புதிய சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

ஆன்மீக குரு மற்றும் சமூக சீர்திருத்தவாதியான பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாபா பாலியா வேண்டுகோளின் அடிப்படையில் இந்த தடைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. எண்ணற்ற எதிர்மறையான சுகாதார தீங்குகளை ஏற்பட செய்பவை அவை என அவர் கூறியுள்ளார். அவரது, இந்த கடிதம் பற்றிய விவரம் இன்று வெளியானது.

ஒடிசாவில் உள்ள சில சிவன் கோவில்களில் பிரசாதம் என வழங்கப்படும் இந்த கஞ்சா, அந்த பகுதியில் நீண்டகாலத்திற்கு மதம் சார்ந்த முக்கியத்துவத்துடன் தொடர்பு பெற்று உள்ளது. பக்தர்களால் கஞ்சா பிரசாதம் என உட்கொள்ளப்படுகிறது.

இதுபற்றி ஒடியா மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரத்திற்கான துறையின் மந்திரி அஸ்வினி பத்ரா, அரசின் இந்த முடிவை நியாயப்படுத்தி உள்ளார். சிவன் கோவில்கள் மட்டுமின்றி, கோவில் வளாகத்திற்குள் எந்தவித போதை பொருள் பயன்பாடு பற்றியும் பரிசோதனை செய்து, தடை செய்ய வேண்டிய தேவை உள்ளது என கூறியுள்ளார்.

ஆனால், 11-ம் நூற்றாண்டை சேர்ந்த லிங்கராஜ் கோவிலின் ஊழியர்கள் கூறும்போது, கோவிலில் கடவுளுக்கு கஞ்சா படைக்கப்படுவதில்லை என கூறுகின்றனர். மற்றொரு அகண்டலமணி கோவிலின் தலைமை பூசாரியான விஜய் குமார் தாஸ் கூறும்போது, கடவுள் சிவனுக்கான சடங்கின்போது, பிரசாதத்தில் கஞ்சா பயன்படுத்தப்படும் என்றும் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு விடும் என்றும் கூறி உள்ளார்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. அரசின் தடை பற்றி என்ன செய்யலாம்? என ஆலோசனை மேற்கொள்வோம் என அவர் கூறியுள்ளார்.


Next Story