கர்நாடகத்தில் அரசு பஸ்களில் கட்டணம் உயர்வா?: துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பதில்
கர்நாடகத்தில் அரசு பஸ்களில் கட்டணம் உயர்வா? என்பதற்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு விதானசவுதாவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் சக்தி திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் இதுவரை 72 கோடி பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர். இது அரசுக்கு நிதி சுமையாகும். போக்குவரத்து கழகங்களுக்கு தேவையான நிதியை அரசு கொடுத்து வருகிறது. பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க வேண்டும் என்ற நோக்கம் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேறி உள்ளது. கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுத்து வருகிறது.
தற்போது தான் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இருந்து மீண்டு வருகின்றன. மாநிலத்தில் இதற்கு முன்பு டீசல் விலை உயர்வு காரணமாக அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தது. 7-8 ஆண்டுகளாக அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவில்லை. கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு இதுவரை முடிவு எடுக்கவில்லை. அதுபற்றி பரிசீலிக்கப்படும். தற்போது தொடங்கப்பட்டுள்ள படுக்கை வசதிகள் கொண்ட சொகுசு பஸ்களுக்கு 'பல்லக்கு' என்று பெயர் சூட்டியவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.