545 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் முறைகேடு நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு


545 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் முறைகேடு நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு
x

கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

பெங்களூரு:-

கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு

கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி மாநிலத்தில் உள்ள 92 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றிருந்தது. இந்த தேர்வை ஒட்டு மொத்தமாக 54 ஆயிரத்து 289 பேர் எழுதினர். பின்னர் கடந்த ஆண்டு(2022) 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உத்தேச பட்டியல் வெளியாகி இருந்தது.

அதில், தேர்ச்சி அடைந்தவர்கள் வினாத்தாளை முன்கூட்டியே பெற்றும், காப்பி அடித்தும் தேர்வு எழுதி இருப்பதாகவும், பணம் கொடுத்தவர்களை தேர்ச்சி பெற வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி அப்போது கையில் எடுத்து விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியது. அத்துடன் பா.ஜனதாவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியது.

கூடுதல் டி.ஜி.பி. கைது

இதையடுத்து, இந்த முறைகேடு குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு கடந்த பா.ஜனதா ஆட்சியில் உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, விசாரணை நடத்திய சி.ஐ.டி. போலீசார், 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தார்கள். அவர்களில் போலீஸ் நியமன பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பாலும் ஒருவர் ஆவார். தற்போது அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். கைதான 100 பேரில், 52 பேர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதி இருந்தவர்கள் ஆவார்கள். இதனால் இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே முறைகேட்டில் ஈடுபட்டு கைதானவர்கள் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும் முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்த 52 பேரும், போலீஸ் துறை சார்பில் நடைபெறும் எந்த ஒரு பணிக்கான தேர்வுகளிலும் பங்கேற்க தடை விதித்து கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி கர்நாடக அரசு அதிரடி உத்தரவையும் பிறப்பித்திருந்தது. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.

நீதி விசாரணைக்கு உத்தரவு

இந்த முறைகேட்டில் பா.ஜனதாவை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இந்த முறைகேடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையாவும் கூறி இருந்தார். இந்த நிலையில், கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 மாதங்கள் ஆன நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக கர்நாடக ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி பி.வீரப்பா தலைமையில் ஒரு குழுவையும் அரசு அமைத்துள்ளது. அந்த குழுவினர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து விசாரித்து 3 மாதங்களில் அரசிடம் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

சி.ஐ.டி. போலீசார் ஒத்துழைப்பு

ஏற்கனவே சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், போலீஸ் நியமன பிரிவில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது உறுதியாகி இருந்ததுடன், பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறி இருப்பதற்கான தகவல்களும் வெளியாகி இருந்தது. இந்த முறைகேட்டில் இன்னும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதன் காரணமாகவே

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி பி.வீரப்பா தலைமையிலான குழுவினர், 'தேர்வில் விதிமுறைகள் மீறப்பட்டது எப்படி?, இந்த முறைகேட்டில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர்?, மூளையாக செயல்பட்டவர்கள் யார்?, பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். நீதி விசாரணை நடப்பதால் இந்த முறைகேடு சம்பந்தப்பட்ட ஆவணங்களை வழங்கவும், சி.ஐ.டி. போலீசார் ஒத்துழைப்பு அளிக்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

அனைத்து கோணத்திலும்...

இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ரஜனிஷ் கோயல் கூறியதாவது:-

'545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடைபெற்ற தேர்வில் நடந்த முறைகேடு குறித்து அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது. 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி இருக்கிறது.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்படும். ஓய்வு பெற்ற நீதிபதி பி.வீரப்பா தலைமையிலான குழுவினர் முழுமையான விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள்'.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story