கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுத்துள்ளோம் - பிரதமர் மோடி


கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுத்துள்ளோம் - பிரதமர் மோடி
x

கோப்புப்படம்

மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

சிகார்,

பிரதமர் மோடி நேற்று ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.

அத்துடன் நாடு முழுவதும் விவசாயிகளுக்காக 1.25 லட்சம் கிசான் சம்ரிதி கேந்திராக்களை அர்ப்பணித்தார். இது விவசாயிகளின் அனைத்து தேவைகளுக்குமான ஒரே மையமாக விளங்கும்.

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

யூரியா விலை

மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுத்து வருகிறது.

விதைகள் முதல் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் வரை அனைத்து வசதிகளையும் அவர்களுக்கு செய்து வருகிறது.

யூரியா விலை உயர்வால் விவசாயிகள் அவதிப்பட எங்கள் அரசு அனுமதிக்காது.

அந்தவகையில் இந்தியாவில் விவசாயிகள் ஒரு மூடை யூரியாவை ரூ.266-க்கு பெறுகிறார்கள். ஆனால் இது பாகிஸ்தானில் ரூ.800-க்கு விற்கப்படுகிறது. மேலும் வங்காளதேசத்தில் ரூ.720-க்கும், சீனாவில் ரூ.2,100-க்கும் விற்பனையாகிறது.

நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ள கிசான் சம்ரிதி கேந்திராக்கள் விவசாயிகளின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.

கிராமங்களில் வசதி

கிராமங்கள் வளர்ந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சியடையும். எனவே நகரங்களில் கிடைப்பது போன்ற அனைத்து வசதிகளும் கிராமங்களிலும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ராஜஸ்தானில் நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்குவதே மத்திய அரசின் முன்னுரிமை ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டும் பங்கேற்க இருந்தார். ஆனால் அவரது காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பங்கேற்கவில்லை.

அவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு உள்ளார். அவரது உடல் நலத்துக்காக பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

சிவப்பு டைரி

பிரதமர் மோடி தனது உரையில், மாநில அரசில் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக முதல்-மந்திரியின் சட்ட விரோத பணப்பரிமாற்றங்கள் அடங்கியுள்ளதாக கூறி மாநில முன்னாள் மந்திரி ராஜேந்திர குதா வெளியிட்ட 'சிவப்பு டைரி' குறித்து பிரதமர் மோடி குறை கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'காங்கிரசின் கொள்ளை கடையின் ஒரு புதிய உள்பத்திதான் சிவப்பு டைரி. அந்த டைரியில் காங்கிரசின் 'ரகசிய பரிமாற்றங்கள்' பதிவாகி இருப்பதாகவும், இது மாநில தேர்தலில் அக்கட்சியை தோற்கடிக்கும் என்றும் கூறப்படுகிறது' என்று தெரிவித்தார்.

வினாத்தாள் மோசடி

இதைப்போல மாநில அரசின் பல்வேறு பணியாளர் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்த சம்பவங்களையும் பிரதமர் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, 'ராஜஸ்தானில் வினாத்தாள் மோசடி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இளைஞர்களின் கனவுகள் நிஜமாக வேண்டுமென்றால் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு நீக்கப்பட வேண்டும்' என்று கூறினார்.

மேலும் அவர், 'ராஜஸ்தானில் இந்த முறை ஒரேயொரு முழக்கமே உள்ளது. அதாவது சகோதரிகள் மற்றும் மகள்கள் மீதான அட்டூழியங்களை ராஜஸ்தான் பொறுத்துக்கொள்ளாது. மேலும் தாமரை வெல்லும், தாமரை மலரும் என்பதே அது' என்றும் உறுதிபட தெரிவித்தார்.


Next Story