குழந்தைக்கு 'மன் கி பாத்' என்று பெயர் சூட்டிய பெற்றோர்...!


குழந்தைக்கு  மன் கி பாத் என்று பெயர் சூட்டிய பெற்றோர்...!
x

பிரதமர் மோடியின் மன தின் குரல் மூலம் பெருமை பெற்ற பூனம்-பிரமோத்குமார் தம்பதிகள் தனது குழந்தைக்கும் ‘மன் கி பாத்’ என்று பெயர் சூட்டினார்கள்

லக்னோ,

பிரதமர் மோடியின் மன தின் குரல் வானொலி நிகழ்ச்சியின் 100-வது பகுதி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் வெளிச்சத்துக்கு வராத சாதனையாளர்கள், செயற்கரிய செயல்கள் செய்தவர்கள் என்று பலதரப்பினரையும் அடையாளம் கண்டு நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி கவுரவித்து வருகிறார்.

அவ்வாறு பாராட்டப்பட்டவர்களில் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர்கெரி மாவட்டத்தை சேர்ந்த பூனம் என்ற பெண்ணும் ஒருவர். இவர் கழிவு வாழைத்தண்டுகளில் இருந்து பல்வேறு விதமான பொருட்களை தயாரித்து வருகிறார். இதன் மூலம் சுயஉதவிக்குழு ஒன்றையும் உருவாக்கி பல பெண்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கி இருக்கிறார்.

ஒரு சாமானிய பெண்ணின் இந்த முயற்சியையும், உழைப்பையும் பாராட்டிய மோடி அவருடன் உரையாடவும் செய்தார். இவ்வாறு மோடி பாராட்டியவர்கள் அனைவரையும் கடந்த 26-ந்தேதி டெல்லிக்கு வரவழைத்து துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தலைமையில் மாநாடு நடத்தப்பட்டது.

இதில் பூனமும் அவரது கணவர் பிரமோத்குமார் ராஜ்புத்துடன் கலந்து கொண்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பூனத்துக்கு நிகழ்ச்சியில் இருந்தபோதே பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை ஆர்.எம்.எல். ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பெருமை பெற்ற பூனம்-பிரமோத்குமார் தம்பதிகள் தனது குழந்தைக்கும் 'மன் கி பாத்' என்று பெயர் சூட்டினார்கள். பூனம் தம்பதியை மத்திய செய்தித் துறை மந்திரி அனு ராக் சிங் தாக்கூர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்தினார்கள்.

டெல்லியில் நடை பெற்ற மாநாட்டில் பூனம் பேசும் போது, பிரதமர் மோடி எனது பெயரை குறிப்பிட்டு பேசியது கடினமாக உழைக்கவும், வாழ்க்கையில் அதிக உயரங்களை எட்டவும் உத்வேகத்தை அளிப்பதாக கூறினார்.


Next Story