நாகரீக சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை - கேரள குண்டு வெடிப்பு குறித்து ராகுல் காந்தி பதிவு


நாகரீக சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை - கேரள குண்டு வெடிப்பு குறித்து ராகுல் காந்தி பதிவு
x
தினத்தந்தி 29 Oct 2023 2:08 PM GMT (Updated: 29 Oct 2023 2:15 PM GMT)

கேரள குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அரசு விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், மார்ட்டின் என்பவர் மதவழிபாட்டு கூட்டரங்கில் வெடிகுண்டு வைத்தது நான் தான் எனக்கூறி சரணடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய கேரளா போலீசார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது மார்ட்டின் தான் என உறுதிபடுத்தி உள்ளனர்.

விசாரணையில் மார்ட்டின் கூறிய வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளதால், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கேரள குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தின் போது வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

இதில் உயிரிழந்தவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். ஒரு நாகரீக சமூகத்தில் வெறுப்புக்கும் வன்முறைக்கும் இடமில்லை. அரசு விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.


Next Story