வெப்ப அலை ஓய்ந்தது: தென்மேற்கு பருவமழை 2 நாட்களில் தொடங்குகிறது


வெப்ப அலை ஓய்ந்தது: தென்மேற்கு பருவமழை 2 நாட்களில் தொடங்குகிறது
x

கோப்புப்படம்

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் வெப்பஅலை ஓய்ந்தது.

புதுடெல்லி,

கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. வீசிய காற்று அனலாக தெறித்தது. மக்கள் கடுமையான துயரங்களை அனுபவித்தனர்.

இந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நேற்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. வானம் மப்பும், மந்தாரமுமாக இருக்க, சில இடங்களில் மழைத்துளியும் விழுந்தது.

வெப்ப அலை ஓய்ந்தது

இதற்கிடையே, இந்தியாவில் வெயிலின் தாக்கம் மற்றும் வெப்ப அலைகள் நேற்றுடன் முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இனி வானில் அவ்வப்போது மேகமூட்டம் ஏற்படும் எனவும், கோடைகாலத்துக்கு முந்தைய மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

மலைப்பாங்கான இடங்களில் கனமழை பெய்யும் என்றும், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மேற்கண்ட மாநிலங்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை

மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கான சூழல் நிலவுவதாகவும், தெற்கு வங்கக்கடலின் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறியுள்ளது.


Next Story