மங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்தது


மங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்தது
x

மங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மங்களூரு:-

கனமழை கொட்டியது

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியும் இன்னும் சரியான மழை பொழிவு இல்லாமல் உள்ளது. ஆனால் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி ஆகிய பகுதிகளில் 3 நாட்களுக்கு அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 3 மணி முதல் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் மங்களூரு டவுன் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

பம்ப்வெல் பகுதியில் சாக்கடை கால்வாய் நிரம்பி மழைநீருடன் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாகன ஓட்டிகள் அவதி

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் மழைநீரில் பழுதாகி நின்றன. இதனால் ஆட்டோக்களில் சென்ற பள்ளி மாணவ-மாணவிகள் சிரமப்பட்டனர்.

மேலும் அவர்கள் அங்கிருந்து மழையில் நனைந்தபடி வீட்டிற்கு நடந்து சென்றனர். இதேப்போல் கொட்டார சவுக்கி பகுதியில் பெய்த கனமழையால் தண்ணீர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது.

இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஒரு சில இடங்களில் சாலைகளின் அருகே உள்ள மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பேரிடர் மீட்பு படையினர், மின்சார ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதேபோல் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா, கொல்லூர், பைந்தூர் காபு, உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் பட்கல் முருடேஸ்வர் சித்தாபுரா அங்கோலா எல்லாப்புரா ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


Next Story