குஜராத், ராஜஸ்தானில் கனமழை நீடிப்பு: வெள்ளப்பெருக்கால் இயல்பு வாழ்க்கை முடக்கம்


குஜராத், ராஜஸ்தானில் கனமழை நீடிப்பு: வெள்ளப்பெருக்கால் இயல்பு வாழ்க்கை முடக்கம்
x

Image Courtacy: PTI

பிபர்ஜாய் புயல் கரையை கடந்த பின் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிப்பதால் வடக்கு குஜராத் மற்றும் ராஜஸ்தானில் கனமழை நீடித்து வருகிறது.

ஆமதாபாத்,

அரபிக்கடலில் இந்த மாத தொடக்கத்தில் உருவான பிபர்ஜாய் புயல் கடந்த 15-ந்தேதி குஜராத்தின் கட்ச் மாவட்டம் ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வரை பலத்த காற்று வீசியது.

இதனால் கட்ச், தேவ்பூமி துவாரகா உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சரிந்தன. ஏராளமான வீடுகளும் சேதமடைந்தன.

அதேநேரம் புயலின் பாதையில் வசித்து வந்த 1 லட்சத்துக்கு அதிகமானோர் ஏற்கனவே முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருந்ததால் உயிர்ச்சேதம் நிகழவில்லை. சுமார் 50 பேர் காயமடைந்திருந்தனர்.

வடக்கு குஜராத் பகுதிகள்

கரையை கடந்த புயல் பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. பின்னர் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கிறது. இதனால் வடக்கு குஜராத் மற்றும் தெற்கு ராஜஸ்தான் பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.

குறிப்பாக குஜராத்தின் பனஸ்கந்தா, படான் மாவட்டங்களில் தொடர்ந்து பேய்மழை பெய்து வருகிறது. பனஸ்கந்தா மாவட்டத்தின் அமிர்காரில் நேற்று காலை 6 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் 206 மி.மீ. மழை பொழிந்துள்ளது.

அங்கு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் புயல் கரையை கடந்த கட்ச் மாவட்டத்தில் படிப்படியாக மழை குறைந்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் லேசான மழையே இருந்தது.

அணைகள் நிரம்புகின்றன

இதற்கிடையே ராஜஸ்தானின் ஜலோர், சிரோகி, பார்மர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

அங்கு வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மாநில பேரிடர் மீட்புப்படையினர் தொடர்ந்து மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

தொடர் மழையால் பார்மர் மாவட்டத்தில் சுமார் 5 சிறை அணைக்கட்டுகள் உடைந்துள்ளன. பல அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. மேலும் பல அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

ஜலோர் மாவட்டத்தின் அகோரில் கடந்த 24 மணி நேரத்தில் 471 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இதைப்போல ஜலோர் 456 மி.மீ., மவுண்ட் அபு 338 மி.மீ. என பல இடங்களில் கனமழை பெய்துள்ளது.

இன்றும் பலத்த மழை

தெற்கு ராஜஸ்தானில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கும் பிபர்ஜாய் புயலின் எச்சமானது, கிழக்கு வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் மூலம் பாலி, சிரோகி, உதய்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மழை பெறும் எனவும், தெற்கு ராஜஸ்தான் பகுதியில படிப்படியாக மழை குறையும் என்றும் கூறியுள்ளது.

இதைப்போல தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு ராஜஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் மேற்கு மத்திய பிரதேச பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) மிதமானது முதல் மிக அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கடலோர காவல்படை

இதற்கிடையே பிபர்ஜாய் புயலின் தாக்கத்தால் கடல் பகுதியில் எந்தவித அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ளும் நோக்கில் குஜராத் கடற்பகுதியில் கடலோர காவல்படை தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக இதற்காக கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்கள், 3 டோர்னியர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கு தற்போதுவரை எந்தவித மோசமான சூழலும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story