ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி


ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
x

கோப்புப்படம்

ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ராஞ்சி,

ஜார்கண்ட் முதல்-மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நடந்த நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இதில் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். கைது செய்யப்பட்டு உள்ள ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை கோர்ட்டு நேற்று தொடங்கியது. இதற்கிைடயே சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். ராஞ்சி பராகெய்ன் பகுதியில் உள்ள இந்த நிலம் ரூ.31.07 கோடி மதிப்பிலானது ஆகும்.

கடந்த 2010-11-ம் ஆண்டு முதலே இந்த சொத்தை சொந்தமாக வைத்திருக்கும் சோரன், அதை மோசடியாக பெற்றுக்கொண்டதாக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில், இந்த சொத்தை பறிமுதல் செய்ய அனுமதியும் கோரப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்த சொத்துக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சோரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

1 More update

Next Story