மாற்றுத்திறனாளி ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு கர்நாடக ஐகோாட்டு நோட்டீசு
மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு, மாநில ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக ஐகோர்ட்டில் அரசு துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில் மாற்றுத்திறனாளிகளான தங்களை பணி இடமாற்றம் செய்தல் உள்ளிட்டவற்றுக்காக அரசு தனியாக விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோா்ட்டு தலைமை நீதிபதி(பொறுப்பு) அலோக் ஆராதே முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் மத்திய அரசின் உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிகளை அரசு பணிக்கு சேர்க்கும் போது, அவர்களது சொந்த மாவட்டம் மற்றும் ஊரை கருத்தில் கொண்டு பணியில் நியமிக்க வேண்டும். ஆனால் மாநில அரசு இந்த உத்தரவுகளை பின்பற்றுவதில்லை என்று வாதிட்டார். இந்த மனு மீது ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அலோக் ஆராதே, இந்த மனு மீது பதில் அளிக்கும்படி கோரி அரசுக்கு நோட்டீசு அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.