மனித உரிமை ஆணையம், போலீஸ் அதிகாரிக்கு பிறப்பித்த அபராதம் ரத்து; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
வழக்கில் குற்றவாளி விடுதலை ஆனதால் மனித உரிமை ஆணையம் போலீஸ் அதிகாரிக்கு பிறப்பித்த அபராதத்தை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு:
வழக்கில் குற்றவாளி விடுதலை ஆனதால் மனித உரிமை ஆணையம் போலீஸ் அதிகாரிக்கு பிறப்பித்த அபராதத்தை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அபராதம்
சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சித்தலிங்கப்பா. கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிக்பள்ளாப்பூரில் உள்ள ஒரு தாபாவில் நடந்த தகராறு தொடர்பாக லட்சுமிகாந்த் உள்பட 15 பேர் மீது வாக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரகுமார் என்பவர் விசாரணை நடத்தி தொட்டபள்ளாப்புரா தாலுகா கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த தாலுகா கோர்ட்டு, குற்றவாளிகள் மீதான சாட்சி, ஆதாரங்கள் நிரூபிக்கப்படாத காரணத்தால், 15 பேரையும் விடுதலை செய்து கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கை சரியாக விசாரிக்கவும், கைதான 15 பேர் மீது கோர்ட்டில் சரியான சாட்சி ஆதாரங்களை வழங்காமல், அவர்கள் விடுதலை ஆக காரணமாகவும் இருந்ததாக கூறி இன்ஸ்பெக்டராக இருந்த சித்தலிங்கப்பா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரகுமாருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
பணயில் அலட்சியமாக...
மனித உரிமை ஆணையம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2015-ம் ஆண்டில் இன்ஸ்பெக்டர் சித்தலிங்கப்பா கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சித்தலிங்கப்பா தரப்பில் ஆஜராகி வாதாடிய வக்கீல், தாபாவில் நடந்த தகராறு தொடர்பாக சித்தலிங்கப்பாவுக்கு போனில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரகுமாரிடம் தகவல் தெரிவித்து புகார் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி, அவரும் விசாரித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சித்தலிங்கப்பா பணியில் அலட்சியமாக இருக்கவில்லை. ஒரு இன்ஸ்பெக்டராக தனது பணியை செய்துள்ளார். அவருக்கு பிறப்பித்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும், என்றார்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சித்தலிங்கப்பாவுக்கு மனித உரிமை ஆணையம் பிறப்பித்த ரூ.10 அயிரம் அபராதத்தை ரத்து செய்து ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.