18 வயது நிரம்பாத பெண்ணின் திருமணம் செல்லும்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


18 வயது நிரம்பாத பெண்ணின் திருமணம் செல்லும்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

18 வயது நிரம்பாத பெண்ணின் திருமணம் செல்லும் என்று கர்நாடக ஐகோா்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

18 வயது நிரம்பாத பெண்ணின் திருமணம் செல்லும் என்று கர்நாடக ஐகோா்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செல்லாது

ராமநகர் மாவட்டம் சன்னபட்டணாவை சேர்ந்தவர் மஞ்சுநாத். அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஷீலா என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, அப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி ஆகவில்லை. திருமணத்திற்கு பிறகு கணவருக்கு இந்த தகவல் தெரியவந்தது.

இதையடுத்து மஞ்சுநாத், பெங்களூரு குடும்ப நல கோர்ட்டில் தனது திருமணத்தை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்தார். அதில், இந்து திருமண சட்டத்தின்படி தனது மனைவிக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை என்றும், இந்த விஷயம் திருமணத்திற்கு பிறகே தனக்கு தெரியவந்ததாகவும், அதனால் தங்களின் திருமணத்தை ரத்து செய்யுமாறும் கோரினார். அந்த மனுவை விசாரித்த குடும்ப நல கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு, மஞ்சுநாத்-ஷீலா திருமணம் செல்லாது என்று உத்தரவிட்டது.

நிபந்தனை விதிக்கவில்லை

இதை எதிர்த்து ஷீலா கர்நாடக ஐகோர்ட்டில் அதே ஆண்டு மேல்முறையீடு செய்தார். மனுவை நீதிபதிகள் அலோக் அராதே, விஸ்வநாத்ஷெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. அந்த அமர்வு நேற்று தனது தீர்ப்பை கூறியது. அதில், இந்த வழக்கில் குடும்ப நல கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவித்துள்ளது.

ஐகோர்ட்டு தனது தீர்ப்பில், "இந்து திருமண சட்டத்தின் 11-வது பிரிவின்படி திருமணம் செய்து கொள்ள பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆனால் திருமணத்தின்போது மனுதாரர் ஷீலாவுக்கு 18 வயது நிரம்பி இருக்கவில்லை. இதனால் அந்த திருமணம் செல்லாது என்று விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த சட்ட பிரிவு, பெண்ணுக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை. அந்த சட்டத்தின் 5-வது பிரிவின் 3-வது உட்பிரிவு, திருமணம் நடக்கும்போது பெண்ணுக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் சட்டப்பிரிவு 11-ன் படி 18 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்ற அந்த அம்சம் தவிர்க்கப்படுகிறது. இந்த அம்சத்தை குடும்ப நல கோர்ட்டு கருத்தில் கொள்ள தவறிவிட்டது. அதனால் இந்த திருமணம் செல்லும் என்று நாங்கள் உத்தரவிடுகிறோம். குடும்ப நல கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்கிறோம்" என்று கூறியுள்ளது.


Next Story