சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி பேராசிரியர் மனு: லோக் அயுக்தாவுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை


சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி பேராசிரியர் மனு: லோக் அயுக்தாவுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
x

சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடக பல்கலைக்கழக பேராசிரியர் தாக்கல் செய்த வழக்கில் லோக் அயுக்தாவுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கவும் ஐகோர்ட்டு கெடு விதித்து இருக்கிறது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் தார்வாரை சேர்ந்தவர் கல்லப்பா. இவர் கர்நாடக பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார். இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி சேர்த்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு, அப்போதைய ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த அமைப்பு தடை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது லோக் அயுக்தா போலீசார் அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய கோரி கல்லப்பா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லோக் அயுக்தா சார்பில் வாதாடிய வக்கீல், 'மனுதாரர் கல்லப்பா தன்னிடம் உள்ள 20 வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு 58 வங்கி கணக்குகள் உள்ளன' என கூறி வாதிட்டார். மேலும் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார். இதையடுத்து அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கல்லப்பா தரப்பில் மீண்டும் வழக்கை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது தன் மீதான வழக்கு விசாரணை 4 ஆண்டுகள் ஆகியும் நிறைவு பெறாமல் உள்ளது. இதனால் தனக்கு கிடைக்க வேண்டிய துணை வேந்தர் பதவி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'லோக் அயுக்தா போலீசார், கல்லப்பா வழக்கில் 2 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்றார். மேலும் அலுவலகத்தில் கிடப்பில் உள்ள அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்க லோக் அயுக்தாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story