இமாசல பிரதேச அரசுக்கு நெருக்கடி: 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்க வைப்பு


இமாசல பிரதேச அரசுக்கு நெருக்கடி: 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்க வைப்பு
x

Image Courtacy: PTI

இமாசல பிரதேச அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் சவால்களுக்கு அஞ்சமாட்டோம் என முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு திட்டவட்டமாக தெரிவித்தார்.

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவளித்தனர். இதனால் மாநில அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. எனவே அந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.

இதற்கு எதிராக அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேற்படி 6 எம்.எல்.ஏ.க்கள், 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் திடீரென உத்தரகாண்ட் அழைத்துச் செல்லப்பட்டு ரிஷிகேஷில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அடுத்தடுத்து அரங்கேறும் இந்த சம்பவங்களால் மாநில காங்கிரஸ் அரசு நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் இத்தகைய சவால்களுக்கு அஞ்சமாட்டோம் என முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக சோலன் பகுதியில் ரூ.186 கோடி வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகையில், "அரசியல் சவால்களுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். ஒவ்வொரு சவாலையும் எதிர் கொண்டு 2032-ம் ஆண்டுக்குள் தற்சார்பு இமாசல பிரதேசம் என்ற கனவை நனவாக்குவோம். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க சில நன்கு அறியப்பட்ட சக்திகள், வரி செலுத்துவோர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும், தீய சக்தியையும் பயன்படுத்தினர்.

இமாசல பிரதேச அரசின் கவனம் முழுவதுமாக மாநிலத்தை நிலையான வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்வதிலேயே இருக்கிறது. ஆனால் அரசை பலவீனப்படுத்த நியாயமற்ற மற்றும் ஜனநாயகமற்ற வழிமுறைகளை பின்பற்றுவதில் பா.ஜனதா தன்னை ஈடுபடுத்தி வருகிறது.

ஊழலில் சகிப்புத்தன்மை இல்லாத கொள்கையை கடைப்பிடித்து, ஊழல் நடைமுறைகளை கட்டுப்படுத்துவதில் அரசு வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தின் வளங்கள் குடிமக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன" என்று சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.


Next Story