இமாசல பிரதேசம்; சிம்லா மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ்-24, பா.ஜ.க.-9, சி.பி.ஐ.(எம்.)-1 இடங்களில் வெற்றி
இமாசல பிரதேசத்தின் சிம்லா மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 34 வார்டுகளில் காங்கிரஸ்-24, பா.ஜ.க.-9, சி.பி.ஐ.(எம்.)-1 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.
சிம்லா,
இமாசல பிரதேசத்தின் சிம்லா மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 34 வார்டுகளுக்கான வாக்கு பதிவு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
5 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது என சிம்லா தேர்தல் அதிகாரியான ஆதித்யா நேகி கூறியுள்ளார். கடந்த செவ்வாய் கிழமை நடந்து முடிந்த இந்த தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இது 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை விட 1.2 சதவீதம் அதிகம் ஆகும்.
இதில், ஆளும் காங்கிரஸ் கட்சியானது 24 இடங்களிலும், பா.ஜ.க. 9 இடங்களிலும், சி.பி.ஐ.(எம்.) 1 இடத்திலும் வெற்றி பெற்று உள்ளன.
இதுபற்றி இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங் சுக்கூ செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, இமாசல பிரதேசம் என அழைக்கப்படும் சிம்லாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
10 ஆண்டுகளில் முதன்முறையாக மாநகராட்சி தேர்தலில் ஒரு வரலாற்று வெற்றியை நாங்கள் பதிவு செய்து இருக்கிறோம். பொதுமக்கள் எங்கள் மீது உள்ள அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர். நாங்கள் அதற்கான பணிகளை செய்வோம் என்று கூறியுள்ளார்.
இந்த தேர்தலில் பெரும்பான்மையான வார்டுகளை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியானது வெற்றி பெற்று உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.