இமாசல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரியங்கா ஆறுதல்


இமாசல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரியங்கா ஆறுதல்
x

இமாசலபிரதேச மாநிலத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட பிரியங்கா, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

குலு,

இமாசலபிரதேச மாநிலத்தில் கடந்த ஜூலை மாதத்தில் குலு மற்றும் மண்டி மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியது. ஜூன் 24-ந் தேதி தொடங்கி கடந்த 11-ந் தேதி வரை பெய்த பருவமழையால் மாநிலத்தில் ரூ.8 ஆயிரத்து 679 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மழை தொடர்பான சம்பவங்களில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 165 நிலச்சரிவுகள் மற்றும் 72 திடீர் வெள்ளப்பெருக்கும் பதிவாகி உள்ளன.

நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா இன்று 2 நாள் பயணமாக இமாசல பிரதேச மாநிலத்துக்கு சென்றார்.

குலுவில் உள்ள பூந்தர் விமான நிலையத்துக்கு வந்த அவருக்கு மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு மற்றும் பொதுப்பணித்துறை மந்திரி விக்மாதித்ய சிங் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணாலி, குலு மாவட்டங்களுக்கு அவர் நேரில் சென்றார். அங்கு நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து மணாலியில் உள்ள ஆலு மைதானத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் ஆப்பிள் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் பெட்டிகளின் விலைகள் குறித்து காங்கிரஸ் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.


Next Story