இந்து பெண் பிரமுகர் சைத்ராவுக்கு சொந்தமான ரூ.1 கோடி பொருட்கள் பறிமுதல்


இந்து பெண் பிரமுகர் சைத்ராவுக்கு சொந்தமான ரூ.1 கோடி பொருட்கள் பறிமுதல்
x

தொழில் அதிபரிடம் மோசடி செய்த வழக்கில் சைத்ரா குந்தாப்புரா தனது நண்பரின் பெயரில் வங்கி லாக்கரில் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்களை குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு:

தொழில் அதிபரிடம் மோசடி செய்த வழக்கில் சைத்ரா குந்தாப்புரா தனது நண்பரின் பெயரில் வங்கி லாக்கரில் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்களை குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரூ.5 கோடி மோசடி

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூரை சேர்ந்தவர் தொழில் அதிபரான கோவிந்தபாபு பூஜாரி. இவர் பெங்களூருவில் இயங்கி வரும் இந்திரா உணவகங்களுக்கு உணவு சப்ளை செய்து வரும் தொழில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக கூறி கோவிந்தபாபு பூஜாரியிடம் ரூ.5 கோடி வாங்கி மோசடி செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக பண்டேபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையின்பேரில் இந்து அமைப்பை சேர்ந்த பெண் பிரமுகர் சைத்ரா குந்தாப்புரா, ககன் கடூரு, பிரஜ்வல், தன்ராஜ், ஸ்ரீகாந்த், ரமேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சென்னநாயக் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விசாரணைக்கு அழைத்து சென்றபோது சைத்ரா குந்தாப்புரா மயங்கி விழுந்தார்.

டிஸ்சார்ஜ்

இதையடுத்து அவர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் எப்போது வேண்டுமானாலும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையின்பேரில், உடுப்பியில் உள்ள கூட்டுறவு வங்கியில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வங்கியின் லாக்கரை திறந்து போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் ரூ.65 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.40 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் என ரூ.1 கோடி மதிப்பிலானவை இருந்தது தெரிந்தது. விசாரணையில் அவை சைத்ரா குந்தாப்புரா, தனது நண்பர் ஸ்ரீகாந்த் பெயரில் வங்கி லாக்கரில் அவற்றை பதுக்கி வைத்தது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story