பெலகாவியில் சிறுத்தை பீதியால் 22 பள்ளிகளுக்கு விடுமுறை
பெலகாவியில் சிறுத்தை பீதியால் 22 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெலகாவி:
பெலகாவி டவுனில் ஜாதவ் நகரில் கடந்த 5-ந்தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. அங்கு புதியதாக கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை சிறுத்தை தாக்கிவிட்டு தப்பி ஓடி அப்பகுதியில் உள்ள புதரில் பதுங்கி கொண்டது. சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலியானார். மேலும் தொடர்ந்து சிறுத்தை அருகில் உள்ள அனுமந்தநகர், குவெம்பு நகர், விசுவேஸ்வர் நகர், சயாத்திரி நகர், தூர்தர்ஷன் கேந்திரா, கேம்ப் பகுதி, இன்டல்கா, விஜயநகர் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் களமிறங்கியுள்ளனர். சிறுத்தையை பிடிக்க 7 இடங்களில் இரும்பு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் இதுவரை சிறுத்தை கூண்டிலும் சிக்கவில்லை. வனத்துறையினர் பிடியிலும் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறது. இதனால் ஜாதவ் நகர் உள்பட 8 பகுதிகளை சேர்ந்த மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். மேலும் சிறுத்தை பீதியால் அப்பகுதியில் செயல்பட்டு வரும் 22 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சிறுத்தை பிடிபடும் வரை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினரும், போலீசாரும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.