நாடாளுமன்றத்தில் அரங்கேறிய அதிர்ச்சி: விசாரணை நடத்த குழுவை அமைத்தது மத்திய அரசு


நாடாளுமன்றத்தில் அரங்கேறிய அதிர்ச்சி: விசாரணை நடத்த குழுவை அமைத்தது மத்திய அரசு
x

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு இந்த குழு பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த அந்த நபர்கள், கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசினர்.

அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது. இதனைத்தொடர்ந்து அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியேயும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலில் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கூடியது. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, இந்த சம்பவம் குறித்துப் பேசினார். இதையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக ஓம் பிர்லா அறிவித்தார். பின்னர் நாடாளுமன்றம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து மறு உத்தரவு வரும் வரை நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு பாஸ் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு குழு அமைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறலுக்கான காரணங்கள் உள்ளிட்டவற்றை இந்தக் குழு ஆராயும் என்றும், பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு இந்த குழு பரிந்துரைக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் மக்களவை செயலகத்தின் கோரிக்கையின் பேரில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டதாகவும், இது மற்ற பாதுகாப்பு அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story