நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் போராட்டம்


நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் போராட்டம்
x

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா உள்ளிட்ட 2 பேரை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் போராட்டம் நடந்தது.

புதுடெல்லி,

நபிகள் நாயகம் பற்றி பா.ஜனதா செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், அவர்களை கைது செய்யக்கோரி நேற்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி ஜூம்மா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்துக்கொண்டு வெளியேறியவர்கள், நுபுர் சர்மாவுக்கும், டெல்லி போலீசுக்கும் எதிராக கோஷமிட்டனர்.

அமைதியாக நடந்த இப்போராட்டம், அரை மணி நேரத்தில் முடிந்தது. அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, பிரக்யாராஜ், மொரதாபாத், சகாரன்பூர், காஷ்மீரில் ஜம்மு, மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா, பஞ்சாப் மாநிலம் லூதியானா, தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன.

மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், பல்கலைக்கழக வளாகத்திலேயே போராட்டம் நடத்தினர்.

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் தொழுகை முடிந்து வெளியே வந்த சிலர், கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத், வடோதரா ஆகிய இடங்களில் போராட்டம் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. நவி மும்பையில், 3 ஆயிரம் பேர் கண்டன பேரணி நடத்தினர். தானே, அவுரங்காபாத், சோலாப்பூர், புனே உள்ளிட்ட இடங்களிலும் பேரணி நடந்தது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் கோர்ட்டில் நுபுர் சர்மாவுக்கு எதிராக புகார்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மின்கம்பியில் நுபுர் சர்மாவின் உருவ பொம்மை தூக்கில் தொங்க விடப்பட்டது.


Next Story