நான் மம்தா பானர்ஜியை நம்பினேன்; ஆனால்... பெண் டாக்டரின் தந்தை பேட்டி
சி.பி.ஐ.யிடம், மகளின் டைரியிலுள்ள பக்கம் ஒன்றை நான் கொடுத்திருக்கிறேன் என பெண் டாக்டரின் தந்தை கூறியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். 23-ந்தேதி வரை அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். வழக்கு விசாரணை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் பெண் டாக்டரின் பெற்றோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில், ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்க கூடும் என்றும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், படுகொலையான பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியின்போது, வழக்கை போலீசார் கையாண்ட முறையை பார்த்ததும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மீதிருந்த நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம். சி.பி.ஐ. இந்த வழக்கில் ஒரு முயற்சியாவது எடுத்து வருகிறது என கூறியுள்ளார்.
சி.பி.ஐ.யிடம் நான், மகளின் டைரியிலுள்ள பக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறேன் என்றார். ஆனால், அதில் இடம் பெற்றுள்ள விவரங்களை பற்றி கூற மறுத்து விட்டார்.
அவர் தொடர்ந்து, தொடக்கத்தில் மம்தா மீது முழு நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது இல்லை. அவர் நீதி வேண்டும் என கேட்கிறார். ஆனால், அதற்கு அவர் என்ன கூறி கொண்டிருக்கிறார்? இந்த விவகாரத்தில் அவர் பொறுப்பேற்று செயல்பட்டிருக்க முடியும். அவர் ஒன்றுமே செய்யவில்லை என மாநில அரசின் விசாரணை பற்றி கேட்கப்பட்டதற்கு பதிலளித்து உள்ளார்.
அவர்கள், எங்களுக்கு நீதி வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால், இதே விசயங்களை கூறும் பொதுமக்களை அவர்கள் கட்டிப்போட முயற்சிக்கின்றனர் என்றார்.
கால்பந்து போட்டியொன்றில், எங்களுக்கு நீதி வேண்டும் என கோஷம் எழுப்பியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதனை குறிப்பிடாமல் அவர், மம்தாவை குறையாக கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த இந்த விவகாரத்திலும், பெண் டாக்டரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நபர்களே, அவர்களுடைய பொறுப்பை நிறைவேற்றுவதில் இருந்து தவறி விட்டார்கள் என்பது சோகத்திற்குரியது என்று அவர் கூறியுள்ளார்.