கர்நாடகாவின் கலாசாரங்களை காந்தாரா படம் பார்த்து அறிந்து கொண்டேன்: மத்திய மந்திரி அமித்ஷா
கர்நாடகாவின் கலாசாரங்களை காந்தாரா படம் பார்த்து அறிந்து கொண்டேன் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பா.ஜ.க. சார்பில் தேசிய தலைவர்களான பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா அடிக்கடி கர்நாடகம் வந்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடப்பாண்டில் 3-வது முறையாக மத்திய மந்திரி அமித்ஷா நேற்று கர்நாடகம் வந்துள்ளார். ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அவரை கட்சியின் மாநில தலைவரும், தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, கர்நாடகாவில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு மத்திய மந்திரி அமித்ஷா பேசினார். அவர் பேசும்போது, சமீபத்தில் நான் காந்தாரா படம் பார்த்தேன். கர்நாடகாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை காந்தாரா படம் எடுத்து காட்டியிருந்தது என புகழாரம் சூட்டினார்.
காந்தாரா படம் பார்த்த பின்பே, இதுபோன்ற வளமிக்க பாரம்பரியங்களை மாநிலம் கொண்டிருக்கிறது என அறிந்து கொண்டேன். நாட்டில் வெகுசில பகுதிகளே, நாட்டை வளப்படுத்தும் வகையில் விவசாயம் மேற்கொண்டு வரும் மக்களை கொண்டிருக்கிறது. கடினம் வாய்ந்த சூழலிலும் அவர்கள் விவசாய பணியில் ஈடுபட்டு நாட்டை வளமடைய செய்கின்றனர் என கூறியுள்ளார்.
கன்னட மொழியில் உருவான 'காந்தாரா' படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட இப்படத்தின் கிளைமாக்சில் இடம்பெற்ற வராஹரூபம் பாடலுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது.
சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. வெளியிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது. ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து வந்தது. படத்தில் இடம்பெற்ற மாடு விரட்டும் காட்சியும், தெய்வகோலா என்கிற சாமியாட்ட காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் படத்திற்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர்.