என் வீட்டில் வைத்து அமலாக்க துறை விசாரிக்க எனக்கு அடிப்படை உரிமை உள்ளது: எம்.எல்.சி. கவிதா பேட்டி


என் வீட்டில் வைத்து அமலாக்க துறை விசாரிக்க எனக்கு அடிப்படை உரிமை உள்ளது: எம்.எல்.சி. கவிதா பேட்டி
x

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க துறை என் வீட்டில் வைத்து விசாரிக்க எனக்கு அடிப்படை உரிமை உள்ளது என எம்.எல்.சி. கவிதா பேட்டியில் கூறியுள்ளார்.



ஐதராபாத்,


டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவின் பெயர் அடிபட்ட நிலையில், கடந்த பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் 8 மணி நேரம் அவரிடம் நேரடி விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிவில், சிசோடியாவை இரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் 4-ந்தேதி வரை அனுமதி அளித்தும், பின்னர் 2-வது முறையாக 6-ந்தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிசோடியா சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அது விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், சிசோடியாவுக்கு 20-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன்படி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், சிசோடியாவிடம் டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி பற்றி அமலாக்க துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய் கிழமையும் இதேபோன்று விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டனர்.

இந்த வழக்கில் ஐதராபாத் நகரை சேர்ந்த தொழிலதிபரான அருண் ராமசந்திரா பிள்ளை என்பவரையும் விசாரணை முகமை அமைப்பு புதிதாக கைது நடவடிக்கை மேற்கொண்டு, காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

இதேபோன்று, டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் மற்றும் மேலவை உறுப்பினரான கவிதாவை இன்று (9-ந்தேதி) நேரில் ஆஜராகும்படி அமலாக்க துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கு டெல்லி கோர்ட்டில் அமலாக்க துறை தாக்கல் செய்த காவல் அறிக்கையில் கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சரத் ரெட்டி, கவிதா, மகுந்தா சீனிவாசுலு ரெட்டி ஆகியோரால் நடத்தப்படுகிற சவுத் குரூப்பிடம் இருந்து, அமித் அரோரா உட்பட பல்வேறு நபர்களால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு விஜய் நாயர் மூலம் ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. பஞ்சாப் சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மிக்கு கவிதா லஞ்சம் கொடுத்து உள்ளார் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டு உள்ளது.

இதேபோன்று, இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25-ந்தேதி சி.பி.ஐ. 7 பேர் மீது தனது முதல் குற்றப்பத்திரிகையை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தது. தொடர்ந்து கவிதாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்தது.

இதன்படி, ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் இல்லத்துக்கு, டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அவர்கள், பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான பதில்களை பெற்று பதிவு செய்தனர். இந்த விசாரணை 7 மணி நேரம் நீடித்தது. இந்த விசாரணையையொட்டி கவிதா வீடு அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் அமலாக்க துறை அவரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது.

இதுபற்றி, கவிதா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, டெல்லியில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என கடந்த 2-ந்தேதி நாங்கள் அறிவிப்பு வெளியிட்டோம்.

இதில் பங்கேற்க 18 கட்சிகள் சம்மதம் தெரிவித்தன. இந்நிலையில், அமலாக்க துறை இன்று நேரில் ஆஜராக எனக்கு சம்மன் அனுப்பியது. அவர்களிடம் வரும் 16-ந்தேதி ஆஜராக அனுமதி கேட்டேன்.

ஆனால், அவர்களுக்கு என்ன அவசரமோ எனக்கு தெரியவில்லை. அதனால், வரும் 11-ந்தேதி (நாளை மறுநாள்) நேரில் ஆஜராக ஒப்பு கொண்டேன் என தெரிவித்து உள்ளார்.

ஒரு விசாரணை அமைப்பு பெண் ஒருவரிடம் விசாரணை நடத்த வேண்டுமென விரும்பினால், அதனை அந்த பெண்ணின் வீட்டிலேயே வைத்து நடத்துவதற்கான அடிப்படை உரிமை அவருக்கு உள்ளது.

அதன்படி, 11-ந்தேதி விசாரணை நடத்த என்னுடைய வீட்டுக்கு அவர்கள் வரலாம் என அமலாக்க துறையிடம் வேண்டுகோளாக கேட்டு கொண்டேன். ஆனால், நான் அவர்கள் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள் என்று எம்.எல்.சி. கவிதா அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


Next Story