இந்த குஜராத்தை நான் உருவாக்கினேன் - குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!


இந்த குஜராத்தை நான் உருவாக்கினேன் - குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!
x
தினத்தந்தி 6 Nov 2022 2:06 PM GMT (Updated: 6 Nov 2022 2:08 PM GMT)

பிரதமர் மோடி குஜராத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி குஜராத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

வல்சாத் மாவட்டம் கப்ரடா தாலுகாவில் உள்ள நானா போந்தா கிராமத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:

குஜராத்திற்கு செழிப்பை கொண்டு வந்தது தாமரை. அதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குஜராத்தியும், அது ஆதிவாசியாக இருந்தாலும், மீனவராக இருந்தாலும், கிராமவாசியாக இருந்தாலும், நகரவாசியாக இருந்தாலும், இன்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறார்.அதனால்தான் இதை நான் குஜராத்திற்காக உருவாக்கினேன் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மக்கள் தங்கள் கடின உழைப்பால் இந்த மாநிலத்தை உருவாக்கியுள்ளனர். 20 வருடங்களுக்கு முன்பு இங்குள்ள பழங்குடியினர் பகுதியில் ஒரு அறிவியல் பள்ளி கூட இல்லை, ஆனால் இன்று இப்பகுதியில் உள்ள அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பழங்குடியின மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தெற்கு குஜராத்தில் உள்ள உமர்காம் முதல் வடக்கே அம்பாஜி வரையிலான பழங்குடியினப் பகுதியிலும் இப்போது ஐந்து மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இன்று இந்த மக்கள் 24 மணி நேர மின்சாரத்தைப் பெறுகிறார்கள், மாநிலத்தில் 100 சதவீத வீடுகளுக்கு குழாய் வழியே குடிநீர் கிடைக்கிறது.

வெறுப்பை பரப்பும் பிரிவினைவாத சக்திகள், குஜராத்தை அவமதிக்க முயற்சித்தவர்கள், குஜராத்தில் இருந்து துடைத்து எறியப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளாக அந்த சக்திகள் கடுமையாக முயற்சித்து வந்தாலும், குஜராத் மக்கள் அவர்களை நம்பவே இல்லை. வெறுப்பை பரப்புபவர்களை குஜராத் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதற்குக் காரணம், மாநில மக்கள் கடுமையாக உழைத்து குஜராத்தை உருவாக்கியுள்ளனர்.

கடந்த காலத்தில் குஜராத் மாநிலத்திற்கு தீங்கு விளைவிக்க முயன்றவர்கள் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்தத் தேர்தலிலும் அவர்கள் அதே நிலையை சந்திப்பார்கள். டெல்லியில் நான் இருந்தாலும், குஜராத்தில் பாஜக இந்த முறை சாதனை வெற்றியை பெறும் என்று தகவல் கிடைத்துள்ளது. கடந்த கால சாதனைகளை முறியடிக்கவே இங்கு வந்துள்ளேன். உங்களுக்காக முடிந்தவரை அதிக நேரம் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராக இருக்கிறேன் என்று குஜராத் பாஜகவிடம் கூறியுள்ளேன்.

இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.


Next Story