மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு - சோனியா காந்தி


மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு - சோனியா காந்தி
x
தினத்தந்தி 20 Sep 2023 6:16 AM GMT (Updated: 20 Sep 2023 6:32 AM GMT)

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

எனவே, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது. நேற்று முன்தினம் இரவு பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனிடையே, பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று இடம்பெயர்ந்தது. பழைய கட்டிடத்தில் குழு புகைப்படம் எடுத்த பிறகு, பிரதமர் மோடி மற்றும் எம்.பி.க்கள் புதிய நாடாளுமன்றத்துக்கு அணிவகுத்து சென்றனர். பின்னர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அலுவல் பணிகள் தொடங்கின.

புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால், மசோதாவை தாக்கல் செய்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, 15 ஆண்டுகளுக்கு மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்கிறது. பெண்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்படும்.

இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் 3ம் நாளான இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் நான் ஆதரவு அளிக்கிறேன்' என்றார்.


Next Story