கர்நாடக முதல்-மந்திரி பதவி வழங்கினால் நிச்சயம் பூர்த்தி செய்வேன்: பரமேஷ்வர் பேட்டி


கர்நாடக முதல்-மந்திரி பதவி வழங்கினால் நிச்சயம் பூர்த்தி செய்வேன்: பரமேஷ்வர் பேட்டி
x

கர்நாடக முதல்-மந்திரி பதவியை எனக்கு வழங்கினால் நிச்சயம் அதனை பூர்த்தி செய்வேன் என முன்னாள் முதல்-மந்திரி பரமேஷ்வர் பேட்டியில் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில், சமீபத்திய சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கான 113 தொகுதிகளை விட கூடுதலாக 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆட்சியமைக்கும் அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, அக்கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நேற்று முன்தினம் கூடி ஆலோசனை மேற்கொண்டு அதன் இறுதி அறிக்கையை கட்சி மேலிடத்திற்கு வழங்கி உள்ளது.

அந்த அறிக்கையை கொண்டு கட்சி தலைமை ஆலோசித்து, முடிவு செய்து கர்நாடக முதல்-மந்திரி யாரென்று அறிவிக்க உள்ளது. இதனை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைமையை சந்திப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான சித்தராமையா டெல்லிக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தனது பிறந்த நாளை நேற்று உற்சாகமுடன் கொண்டாடினார். இதன்பின் அவர், நான் டெல்லிக்கு போக விரும்பினேன். ஆனால், எனக்கு சில சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என்றார்.

இந்த நிலையில், அவர் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இன்று மதியம் டெல்லி வந்தடைந்த அவர், இதன்பின், கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரியை முடிவு செய்யும் கட்சியின் தலைமையுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

கர்நாடகாவில் தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி முதல் மந்திரி வேட்பாளரை அறிவிக்காத நிலையில், டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதல் மந்திரி பதவிக்கான போட்டி நிலவியது. முதல்-மந்திரி பதவியை கட்சி வழங்கினால் ஏற்று கொள்வேன் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

எனினும், கடந்த 2 தினங்களாக, டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோரின் ஆதரவாளர்கள் நகர் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி தங்களது தலைவருக்கான ஆதரவை வெளிப்படுத்தினர். இதில், டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள், அவரது உருவம் கொண்ட கொடியை ஏந்தியபடி, கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கர்நாடகாவில் முதல்-மந்திரி பதவியை முன்னாள் துணை முதல்-மந்திரியான பரமேஷ்வருக்கு தர வேண்டும் என வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், காங்கிரசுக்குள் மும்முனை போட்டி என்ற நிலை ஏற்பட்டது.

அவர்கள் துமகூரு நகரில் கோஷங்களை எழுப்பியபடியும், கட்சி கொடி மற்றும் பரமேஷ்வர் உருவம் பொறித்த படத்துடன் கூடிய அட்டைகளை ஏந்தியபடியும் சாலை வழியே ஊர்வலம் சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் முதல்-மந்திரி பதவிக்கு இருவர் இடையே போட்டிக்கான சூழல் காணப்படும்போது, தற்போது அதில் பரமேஷ்வரும் இணைந்து உள்ளார். எனினும், கட்சி மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ அதற்கேற்பவே, இந்த விசயத்தில் தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், பரமேஷ்வர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, காங்கிரஸ் மேலிடம் ஆனது, கர்நாடக முதல்-மந்திரி பதவிக்கான பொறுப்பை எனக்கு வழங்கினால், நிச்சயம் நான் அதனை பூர்த்தி செய்வேன். என்னை பற்றியும், என்னுடைய பணி பற்றியும் அவர்களுக்கு எல்லா விசயமும் தெரியும். நான் அரசியல் ஆதரவை திரட்டும் செயலில் ஈடுபட விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.


Next Story