பாகிஸ்தானை இந்து நாடாக மாற்றி விடுவேன்; உத்தரகாண்ட் சாமியார் சர்ச்சை பேச்சு
இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தானையும் இந்து நாடாக மாற்றி விடுவேன் என உத்தரகாண்ட் சாமியார் சர்ச்சையாக பேசியுள்ளார்.
சூரத்,
உத்தரகாண்டில் உள்ள பாகேஷ்வர் தாம் என்ற கோவிலின் தலைவராக தீரேந்திர சாஸ்திரி இருந்து வருகிறார். சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் அவர், கடந்த காலத்தில் இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என பல முறை பேசியுள்ளார்.
சமீபத்தில் சர்ச்சையை கிளப்பிய, தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இந்தியாவின் உண்மை நிலையை படம் காட்டுகிறது. இந்துக்கள் எல்லோரும் தூங்கி கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.
இந்நிலையில், குஜராத்தின் சூரத் நகரில் அவர் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். இதில் மக்கள் அதிகளவில் கூடியிருந்தனர். அப்போது அவர் பேசும்போது, இன்று போல் குஜராத் மக்கள் என்று ஒன்று திரண்டு வருகிறார்களோ, அப்போது இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானையும் இந்து நாடாக நாம் மாற்றுவோம் என கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இவர் நடத்தும் கூட்டத்திற்கு மக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். இதனால், அவருக்கு மத்திய பிரதேச அரசு, ஒய் பிரிவு பாதுகாப்பை வழங்கி உள்ளது.