அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் விமானப்படை


அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் விமானப்படை
x

மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கவும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்கவும் இந்திய விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கவுகாத்தி,

அசாமின் 35 மாவட்டங்களில் கனமழையால் 32 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையான 3 கோடி பேரில் 7.2 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 234 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

அசாம் வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ''மே 21 முதல் 24-ம் தேதி வரை அசாமில் கனமழை பெய்யும். குறிப்பாக மே 23-ம் தேதி அதி கனமழை பெய்யும்'' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் நதியின் கரை உடைப்பு ஏற்பட்டு ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் அசாமின் நிலைமை மேலும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது.

பல இடங்களில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து, மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கவும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்கவும் இந்திய விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அசாமில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story