ஈரான் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! வானில் பறந்தபடி இந்திய போர் விமானங்கள் கண்காணிப்பு: டெல்லியில் பரபரப்பு!


ஈரான் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! வானில் பறந்தபடி இந்திய போர் விமானங்கள் கண்காணிப்பு: டெல்லியில் பரபரப்பு!
x
தினத்தந்தி 3 Oct 2022 1:54 PM IST (Updated: 3 Oct 2022 5:46 PM IST)
t-max-icont-min-icon

இந்திய வான் எல்லை பகுதிக்குள் ஈரான் பயணிகள் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து புறப்பட்டு சீனாவின் குவாங்சூ நோக்கி மஹான் நிறுவனத்தின் ஒரு பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது.

இந்திய வான் எல்லை பகுதிக்குள் ஈரான் பயணிகள் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அந்த விமானத்தின் விமானி, டெல்லி விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

அந்த விமானி தங்கள் விமானத்தை உடனடியாக டெல்லியில் தரையிறக்க அனுமதி கோரினார். ஆனால் ஜெய்ப்பூரில் தரையிறங்குமாறு விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் டெல்லி போலீசாருக்கு, வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் கிடைத்தது.

உடனே இந்திய விமானப்படை தயார் நிலையில் இருந்தது.இந்திய விமானப்படையை சேர்ந்த 2 விமானங்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்ட விமானத்தை கண்காணித்தன.

அந்த விமானத்தை இடைமறித்து, பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் உடனே புறப்பட்டு சென்றன. அந்த விமானத்தை இடைமறிக்க இந்திய விமானப்படையின் ஜெட் விமானங்கள் துரத்தின. இதற்காக பஞ்சாப் மற்றும் ஜோத்பூர் விமானதளங்களில் இருந்து எஸ்யு-30எம்கேஐ ரக போர் விமானங்கள் புறப்பட்டு சென்றன.

ஆனால் அந்த விமானி இதனை ஏற்கவில்லை. அதன் பின் அந்த விமானம் இந்திய வான் எல்லைப் பகுதியை கடந்து, சீனா நோக்கி பறந்தது. இதனால் வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மேலும், டெல்லி - ஜெய்ப்பூர் வான் வழித்தடத்தில் அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு, உயரம் தாழ்ந்து பறந்து கொண்டிருந்தது ரேடார் மூலம் தெரிய வந்தது. விரிவான விசாரணைக்கு பின் முழு தகவலும் தெரிய வரும் என்று அதிகாரிகள் கூறினர்.


Next Story