"மணீஷ் சிசோடியா இன்று பா.ஜனதாவில் இணைந்தால்...!!" - ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது குறித்து கெஜ்ரிவால் கிண்டல்
மணீஷ் சிசோடியா இன்று பா.ஜனதாவில் இணைந்தால், நாளையே விடுதலையாகி விடுவார் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையே, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது. சத்யேந்தர் ஜெயினும், மணிஷ் சிசோடியாவும் ஆம் ஆத்மியின் தேர்தல் வெற்றிகளுக்கு காரணகர்த்தாக்களாக பார்க்கப்படுகிறார்கள்.அதனால் அவர்களது கைது நடவடிக்கை, ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் மணீஷ் சிசோடியா இன்று பா.ஜனதாவில் இணைந்தால், நாளையே விடுதலையாகி விடுவார் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "இந்தியாவிற்கு விருதுகளை கொண்டு வந்த இரண்டு பேர் பிரதமர் மோடியால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கலால் கொள்கை ஒரு சாக்காக இருந்தது... அவர்களிடம் எந்த மோசடியும் இல்லை. கல்வியில் சிறப்பாக பணியாற்றியதால் சிசோடியா கைது செய்யப்பட்டார்... சுகாதாரத்தில் சிறப்பாக பணியாற்றியதால் ஜெயின் கைது செய்யப்பட்டார்
பா.ஜனதாவின் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், சிசோடியாவின் வீட்டிலோ அல்லது அவரது வங்கிக் கணக்குகளிலோ எந்தப் பணத்தையும் சிபிஐ அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.அதேநேரத்தில், மணீஷ் சிசோடியா உடனே பா.ஜனதாவில் இணைந்தால், நாளையே விடுதலையாகி விடுவார். ஆம் ஆத்மியின் வளர்ச்சியை பா.ஜனதா தடுக்க நினைக்கிறது. ஆம் ஆத்மி பஞ்சாப்பில் வெற்றிபெற்றதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆம் ஆத்மி அமைச்சர்கள் சிறந்த திட்டங்கள் மூலம் இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளனர்.
பாஜனதா ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், குஜராத்தில், ஆம் ஆத்மி ஆட்சியைப் போன்று சிறந்ததாக மாற்ற முடியவில்லை. இது நடக்காது என டெல்லி மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அதேநேரத்தில், டெல்லியின் இந்த பணி தொடரும். " என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.