'காஷ்மீரில் அமைதி நிலவினால் மெஹ்பூபா முப்தியை வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஏன்?' - ப.சிதம்பரம் கேள்வி


காஷ்மீரில் அமைதி நிலவினால் மெஹ்பூபா முப்தியை வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி
x

மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது ஏன்? என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றி, மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது காஷ்மீரில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த முடிவின் காரணமாக காஷ்மீர் மக்களால் தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடிகிறது என துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

இந்த நிலையில், காஷ்மீரில் அமைதி நிலவினால் முன்னாள் முதல்-மந்திரி மெஹ்பூபா முப்தியை வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஏன்? என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள' அமைதியை' ஜம்மு-காஷ்மீர் அரசாங்கமும், துணை நிலை கவர்னரும் கொண்டாடுகின்றனர். 'கல்லறையின் அமைதி மற்றும் அடிமையின் அமைதி' குறித்து ஜனாதிபதி கென்னடி எச்சரித்ததை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

ஜம்மு-காஷ்மீரில் இவ்வளவு அமைதி நிலவுகிறது என்றால், அரசாங்கம் ஏன் மெஹ்பூபா முப்தியை வீட்டுக் காவலில் வைத்துள்ளது? மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது ஏன்? இந்தியா முழுவதும் சுதந்திரம் நசுக்கப்படுகிறது, ஆனால் ஜம்மு-காஷ்மீரில் சுதந்திரம் மிகக் கடுமையாக ஒடுக்கப்படுகிறது."

இவ்வாறு ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


Next Story