'நான் சோர்வடையவில்லை, ஓய்வு பெறவும் இல்லை' - வயது குறித்த விமர்சனத்திற்கு சரத் பவார் பதிலடி


நான் சோர்வடையவில்லை, ஓய்வு பெறவும் இல்லை - வயது குறித்த விமர்சனத்திற்கு சரத் பவார் பதிலடி
x

அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றும் மக்களுக்கு சேவை செய்யவே விரும்புவதாகவும் சரத் பவார் தெரிவித்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தனர். தொடர்ந்து சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசின் துணை முதல்-மந்திரியாக கடந்த 2-ந்தேதி அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனிடையே சரத் பவார் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று அடுத்த தலைமுறையினருக்கு வழி ஏற்படுத்த வேண்டும் என அஜித் பவார் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், "என் மீது தவறான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. நான் சரத் பவார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவர் ஓய்வு பெற வேண்டும். இளைய தலைமுறைக்கு வழிவிட வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். அரசியலில் கூட பா.ஜ.க. தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். உதாரணமாக எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை ஆகியோரைப் பாருங்கள்" என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், "நான் சோர்வடையவில்லை, ஓய்வு பெறவும் இல்லை. மொரார்ஜி தேசாய் எந்த வயதில் பிரதமர் ஆனார்? நான் பிரதமர் ஆகவோ, மந்திரி ஆகவோ ஆசைப்படவில்லை. நான் மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.


Next Story