அரிய நோய்க்கான மருந்துகளுக்கு வரிவிலக்கு - நாளை முதல் அமல்


அரிய நோய்க்கான மருந்துகளுக்கு வரிவிலக்கு - நாளை முதல் அமல்
x

கோப்புப்படம்

அரிய நோய்க்கான மருந்துகளுக்கு வரிவிலக்கு நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

புதுடெல்லி,

நமது நாட்டில் அரிய வகை நோய்களுக்கான மருந்துகள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இப்படி இறக்குமதி செய்யப்படுகிற மருந்துகளுக்கு 10 சதவீத அடிப்படை சுங்க வரி விதிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் 'ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி' என்ற தசைநார் சிதைவு நோய் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையிலான புற்று நோய் சிகிச்சைக்கான மருந்தாக உள்ள 'பெம்ப்ராலிஜூமாப்' என்ற மருந்துக்கும் சுங்க வரி விலக்கு தரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிற அரிய வகை நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கும் சுங்க வரி நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மத்திய அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன. அதைப் பரிசீலித்த மத்திய அரசு அரிய வகை நோய்களுக்கான மருந்துகள் மற்றும் சிறப்பு உணவுகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.

அரிய வகை நோய்களுக்கான தேசிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அரியவகை நோய்களுக்கான மருந்துகளுக்கும் இந்த வரி விலக்கு கிடைக்கிறது. இந்த சுங்க வரி விலக்கு நாளை (1-ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


Next Story