சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் வெற்றி பெற செய்யவேண்டும்டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்
கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்யவேண்டும் என்று மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மங்களூரு-
கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்யவேண்டும் என்று மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கடவுள் துணை உள்ளது
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா உஜிரேயில் நேற்று முன்தினம் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வந்திருந்தார். அந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர கூடாது என்று பல்வேறு குறுக்கு வழிகளை பா.ஜனதா கையாண்டு வருகிறது. ஆனால் சொந்த கட்சியில் இருப்பவர்களுக்கே அவர்கள் தலைவர்கள் மீது நம்பிக்கையில்லை. ஜெகதீஷ் ஷெட்டர், லட்சமண் சவதி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் பா.ஜனதாவில் இருந்து பிரிந்து காங்கிரசில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறோம்.
இந்த முறை தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இந்த தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். கடவுள் துணை எங்களுக்கு உள்ளது. மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்.
காங்கிரசிற்கு ஆதரவு
சாதி, மதத்தால் மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். மதத்தால் பிரிந்தாலும் நாம் அனைவரும் ஒருவரே. இந்த மங்களூரு தொகுதியில் இதற்கு முன்பு ஏராளமான மத மோதல் நடந்தது. சிவமொக்காவில் கலவரம் வெடித்தது. இதற்கு பா.ஜனதாவின் பிரிவினை அரசியல்தான் காரணம். காங்கிரஸ் அனைத்து மக்களையும் ஒன்றாகத்தான் பார்க்கிறது. இந்த கடலோர மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்கவேண்டும்.
இந்த தேர்தலில் பா.ஜனதாவில் ஊழல், 40 சதவீதம் கமிஷன், சப்-இன்ஸ்பெக்டர் பணியில் நடந்த முறைகேடுகளை முன் வைத்தே பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை பா.ஜனதா அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் காங்கிரஸ் நிறைவேற்றிவிட்டது. மே 10-ந் தேதி வாக்களிக்கும் நாள் மட்டும் இல்லை. அது மக்களாக உங்களின் எதிர்காலம். உங்கள் எதிர்காலத்தை நீங்களே நிர்ணயம் செய்யும் நாள் இந்த தேர்தல். காங்கிரஸ் கட்சியை மக்கள் வெற்றி பெற செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.