பத்ராவதியில்மகாத்மா காந்தி சிலை உடைப்பு
பத்ராவதியில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சிவமொக்கா
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஒலேநரசிபுராவில் உள்ள காந்தி சர்க்கிளில் மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மர்ம நபர்கள் சிலர் இந்த மகாத்மா காந்தி சிலையை அடித்து உடைத்துள்ளனர்.
இதில் அந்த சிலை முழுவதும் சேதம் அடைந்தது. இதை பார்த்த பொதுமக்கள் காந்தி சிலை முன்பு நின்று போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற ஒலேநரசிபுரா போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பிற்காக குவித்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் நேற்று இந்திய தேசிய மாணவர் அமைப்பினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமாரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.
அதில் காந்தி சிலையை உடைத்த மர்ம நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.