கொப்பாவில் அரசு உறைவிட பள்ளியில் மாணவி மர்மசாவு


கொப்பாவில் அரசு உறைவிட பள்ளியில் மாணவி மர்மசாவு
x
தினத்தந்தி 28 July 2023 6:45 PM GMT (Updated: 28 July 2023 6:47 PM GMT)

கொப்பாவில் அரசு உறைவிட பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தாள்.

சிக்கமகளூரு-

கொப்பாவில் அரசு உறைவிட பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தாள். அவளது உடலை போலீஸ் நிலையம் முன்பு வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

9-ம் வகுப்பு மாணவி

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புராவை சேர்ந்தவர் அமுல்யா (வயது 14). இவள் கொப்பா தாலுகா அரந்தூர் கிராமத்தில் உள்ள மொரர்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் உறைவிட பள்ளி கழிவறையில் மாணவி அமுல்யா தூக்கில் பிணமாக தொங்கினாள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதுபற்றி ஆசிரியர்கள் கொப்பா போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கழிவறையில் தூக்கில் பிணமாக தொங்கிய அமுல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் போராட்டம்

இதுபற்றி அமுல்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அமுல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொப்பா அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அமுல்யாவின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவளது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் அமுல்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள், அவளது உடலை கொப்பா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் போலீஸ் நிலையம் முன்பு உடலை வைத்து அவர்கள் திடீரென்று போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், அமுல்யா தற்கொலை செய்துகொண்டதாக கூறுகிறார்கள். பள்ளியில் நன்றாக படித்து வந்த அமுல்யா, எதற்காக தற்கொலை செய்ய வேண்டும். அவளது சாவில் மர்மம் உள்ளது என்றனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து போலீசார், அமுல்யாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்ற அவர்கள், அமுல்யாவின் உடலை எடுத்து கொண்டு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கொப்பா போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story