குஜராத்தில் ஆட்டோ ஓட்டுனர் வீட்டுக்கு சாப்பிட சென்ற கெஜ்ரிவாலை தடுத்த போலீசாரால் பரபரப்பு
குஜராத்தில் ஆட்டோ ஓட்டுனரின் வீட்டுக்கு இரவு உணவு சாப்பிட சென்ற டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை போலீசார் தடுத்தது பரபரப்பு ஏற்படுத்தியது.
ஆமதாபாத்,
குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. இதேபோல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இதன்படி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த பயணத்தில், குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் அல்லது மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ளார். மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகையாக வழங்கப்படும் என மேலும் ஒரு வாக்குறுதியையும் கெஜ்ரிவால் அளித்து மகளிர் வாக்குகளையும் கவர்ந்துள்ளார்.
இந்த நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் குஜராத்துக்கு நேற்றும், இன்றும் என 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு சென்ற அவர், ஆட்டோ ஓட்டுனர்கள் கூடிய கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசி முடித்ததும், விக்ரம் தந்தானி என்ற கத்லோடியா பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தனது வீட்டுக்கு சாப்பிட வரும்படி கெஜ்ரிவாலிடம் கோரினார். அதற்கு உடனடியாக கெஜ்ரிவால் பஞ்சாப் மற்றும் குஜராத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் என் மீது அன்பு செலுத்துகின்றனர்.
நான் இன்று இரவு (நேற்று) 8 மணிக்கு வரட்டுமா? என கெஜ்ரிவால் கேட்டார். ஆட்டோ ஓட்டுனரும் சரி என்றார். இதன்படி, இரவு 7.30 மணியளவில் தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து கெஜ்ரிவால் கிளம்பி, விக்ரமின் ஆட்டோவில் பயணித்து, அவரது வீட்டுக்கு புறப்பட்டார்.
எனினும், கெஜ்ரிவாலை வழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, சிறிது நேரம் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின்னர், ஆட்டோ ஓட்டுனருக்கு பின்னால் காவல் அதிகாரி ஒருவர் அமர்ந்து கொண்டார். அவர்களது ஆட்டோவை காவல் துறையின் 2 கார்கள் பாதுகாப்புக்காக உடன் பின் தொடர்ந்து சென்றன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.